Breaking News

சிக்கலில் சிக்கியுள்ள ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வரும் 22ம் திகதி பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளிக்கும் நிகழ்வுக்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில், தன்னை இராணுவ சேவைக்குள் ஈர்க்க ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும், அத்தகைய முடிவு அவர் இராணுவத்துக்கு உத்தரவுகளை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அவரது அர்ப்பணிப்புக்காக, பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்குவது பொருத்தமானதே என்றாலும், அது பெயரளவுக்கானதாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், பீல்ட் மார்ஷலுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் பட்டிகளைக் கொண்ட சீருடையைத் தயார் செய்யும்படி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கை  இராணுவத்தில் தனக்கு ஆதரவான அதிகாரிகள் பலரை உயர்மட்டப் பதவிகளில் நியமிக்க ஜெனரல் சரத் பொன்சேகா பரிந்துரை செய்திருந்தார். அந்த நியமனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவுக்கமைய, அந்த நியமனங்களை, செல்லுபடியற்றதாக புதிய இராணுவத் தளபதி அறிவித்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.