மீனவர்களின் விவகாரம்! வியாழனன்று ஜனாதிபதி முக்கிய சந்திப்பு
இந்தியா – இலங்கை மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
சென்னையில் கடைசியாக நடந்த பேச்சுக்களின் போது, இந்திய மீனவர்கள் தரப்பில் இந்த ஆறு அம்சத் திட்டம், முன்வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, இலங்கை கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கும் யோசனையும் ஒன்றாகும்.
இதுகுறித்து தீர்மானிக்க சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கேட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை, வடமாகாண கடற்றொழில் சங்கங்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ள பேச்சுக்களின் பின்னரே, இந்த திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சின் செயலர் நிமால் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.