இந்திய பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆய்வு!
இந்தியாவின் ஜோத்பூர் நகரில் ஆரம்பமாகவுள்ள தீவிரவாதம் தொடர்பான மாநாட்டில், விடுதலைப் புலிகள் குறித்த விவகாரமும் ஆய்வுக்குரிய விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாடு “அதிகரித்து வரும் நாடு கடந்த தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் அதன் சூழ்நிலைகளும், பூகோள அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான வழிகளும்” என்ற தலைப்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜோத்பூரில் உள்ள சர்தார் பட்டேல், காவல்துறை, பாதுகாப்பு, மற்றும் குற்றவியல் நீதிக்கான பல்கலைக்கழகத்தில் இன்று தொடக்கம், மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.
இந்த மாநாட்டில், 26/11 மும்பைத் தாக்குதல்கள், எல்லை கடந்த தீவிரவாதம், தீவிரவாத முறியடிப்பு ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தின் தலிபான் வாதம், கடல்சார் தீவிரவாதம், தீவிரவாத வர்த்தகம்- ஆயுதங்கள், போதைப்பொருட்கள், போலி நாணயத்தாள்கள், இனத்தேசிய தீவிரவாத அமைப்புகள் குறித்த ஆய்வு – விடுதலைப் புலிகள் மற்றும் செச்சென் போராளிகள், இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி தீவிரவாதம், புலனாய்வு பரிமாற்றம், சமூக ஊடகங்கள் மற்றும் தீவிரவாதம், இடதுசாரி தீவிரவாதம், ஆகிய தலைப்புகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.பி.மாலிக், எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரகாஸ் சிங், ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் இந்த மாநாட்டில், உரையாற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, மற்றும் அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், கிறீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.