Breaking News

ரணிலின் கருத்தை வரவேற்கும் இலங்கை மீனவர்கள்!

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லைமீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் தவறில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தானது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்வதையும், தமது கடல் வளத்தை அழிப்பதையும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தைத் தாங்கள் வரவேற்பதாகவும் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்தார்.

அண்மையில் யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் உள்ளுர் மீனவர்கள் மீது பெட்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி சிலரைக் காயப்படுத்தியதை அடுத்தே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையாக நிலைப்பாடு வெளிப்படுத் தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ள கருத்து கடுமையாக இருந்த போதிலும், அந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் அதற்கு முரண்பாடான கருத்தைத் தங்களால் வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்திய மீனவர்களை நீண்ட காலமாகவே எல்லை தாண்டி வரவேண்டாம் என்று தாங்கள் எச்சரித்திருந்தும், அவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

இருநாட்டு மீனவர்களும் நடத்திய பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்திய மீனவர்கள் நடந்து கொள்வதாக உறுதியளித்திருந்த போதிலும், அவர்கள் அதனைக் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதனால், கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இரு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அடிப்படையில் மீனவர்கள் என்ற வகையில் இந்தப் பிரச்சனைக்கு ஆயுத ரீதியாகத் தீர்வு காண முற்படுவது நாகரிகமற்ற செயல் அல்லவா என்று கேட்டதற்கு, இந்தப் பிரச்சனைக்கு இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதே ஒரே தீர்வாகும் என்றும் எமிலியான்பிள்ளை பதிலளித்தார்.

எனினும் இதயசுத்தியுடனான பேச்சுக்களின் மூலம் உடன்பாட்டிற்கு வர முடியும் என்றும், அவ்வாறு எட்டப்படுகின்ற முடிவினை கட்டாயம் கடைப்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களும், இந்திய அரசும் முன்வர வேண்டும் என்றும் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்தார்.