இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்
நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
கரும்புலிகள் அணியில், ஆண்களுடன் பெண்களும் இருந்தனர். ஆனால், 12,077 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது சமூகத்தில் அமைதியாக வாழ்கின்றனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான கரும்புலிகள் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், எவரும், குற்றங்களிலோ, வன்முறைகளிலோ ஈடுபடவில்லை. எனினும், புனர்வாழ்வுக்குப் பின்னர், சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில், ஆண், பெண் போராளிகளுக்கு இடையில் சிக்கலான வேறுபாடுகள் உள்ளன.
ஆண்களை சமூகம் ஏற்றுக் கொண்டாலும், விடுவிக்கப்பட்ட 2269 பெண் போராளிகள், சமூகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கரும்புலிகளின் மனோநிலையை, மாற்றுவது ஒன்றும் இலகுவான காரியமில்லை. அவர்களை விடுதலைப்புலிகள் மிக கவனமாகத் தெரிவு செய்து பயிற்சி அளித்துள்ளனர்.
சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்பணர்வு ஊட்டப்பட்டுள்ளது. உயிர்த் தியாகம் செய்வது, விடுதலைப் புலிகளின் போராட்டத்தில், மிகச் சிறந்த செயல் என்று நம்பிக்கையூட்டப்பட்டுள்ளது.
இப்போது, முன்னாள் போராளிகள் வன்முறையை நிராகரிக்கின்றனர். இவர்களில் 8 வீதமானோர் மட்டுமே, காவல்துறை அல்லது, பாதுகாப்புப் படைகளில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முன்னாள் போராளிகள், ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ, ஏந்த விரும்பவில்லை.
அரசாங்க உதவியுடன் ஆண் போராளிகள், வேலை தேடிக் கொண்டுள்ளனர் அல்லது சிறு வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில் 29 வீதமானோர், அரசாங்க கடன்களைப் பெற்று சிறிய வியாபாரம் போன்ற சுயதொழில்களில் ஈடுபடுகின்றனர்.
16 வீதமானோர், பயிற்சி பெற்ற, பயிற்சி பெறாத தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். 11 வீதமானோர், விவசாயத்திலும், 7 வீதமானோர் தனியார் துறையிலும், 4 வீதமானோர் அரசாங்கத்துறையிலும், 8 வீதமானோர் மீன்பிடியிலும், ஏனைய 8 வீதமானோர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலும் பணியாற்றுகின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 2269 பெண் போராளிகளில், சிலர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், பெண் போராளிகள் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் பிந்திய அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்களும், சிறுவர்களும், சமூகத்தில் மரியாதையை இழந்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பெண்களில், 25 வீதமானவர்கள், கணவனை இழந்தவர்கள் அல்லது உடல் உறுப்புகளை இழந்தவர்களாவர்.
2172 முன்னாள் போராளிகள் இன்னமும், புனர்வாழ்வு பெறாமல் உள்ளனர். அவர்கள் மீண்டும் ஆயுதமேந்தும் ஆபத்து உள்ளது. அவர்களைப் பிடித்து புனர்வாழ்வு அளிக்க சட்டரீதியான செயல்பாடுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.