மீனவர்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்பு சுஸ்மாவுடன் பேசும்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “இந்தியப் பிரதமரின் பயணத்துக்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
அவருடன், நாங்கள் கலந்துரையாடவுள்ள முக்கியமான விவகாரங்களில், வடபகுதி மீனவர்களின் பிரச்சினையும் ஒன்றாகும். அண்மையில் நான் யாழ்ப்பாண மீனவர் சங்கத் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது, யாழ்ப்பாணம் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தாம் சந்தித்து மனு ஒன்றைக் கையளிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டிருந்தனர்.
இதுகுறித்து நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பேசவுள்ளோம். வடபகுதி கடற்பரப்பில் தமிழ்நாடு மீனவர்களின் இழுவைப்படகுகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளது குறித்து அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.தமிழ்நாட்டு மீனவர்களின் ஊடுருவலை தடுப்பதில் இலங்கை கடற்படை தாமதமாகவே செயற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், வடக்கு,கிழக்கில் உள்ள நிலங்களை உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடவுள்ளது.