Breaking News

இலங்கையில் மோடிக்காக மீறப்பட்ட இராஜதந்திர மரபுகள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்குச் சென்றடைந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காத்திருந்து அவரை வரவேற்றது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நரேந்திர மோடியை வரவேற்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், இறுதி நேரத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு வந்து, இந்தியப் பிரதமரை வரவேற்றார்.

அங்கு தாம் இலங்கை பிரதமரை எதிர்பார்க்கவேயில்லை என்றும், அதிகாலை நேரத்தில், ரணில் விக்கிரமங்க வந்தது ஆச்சரியமாக இருந்தது என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக அமைச்சர் ஒருவரே வெளிநாட்டு அரச தலைவரை வரவேற்பது வழக்கம், என்றாலும், இலங்கை பிரதமரே காத்திருந்து வரவேற்றது, மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுபோலவே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மரபுகளை மீறி, அனுராதபுரவில் இந்தியப் பிரதமரை வரவேற்றார். அனுராதபுர சிறிமாபோதியில் வழிபாடு நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது,இலங்கை ஜனாதிபதி அவரை அங்கு வரவேற்றது வழக்கத்துக்கு மாறானதாகும். இலங்கை ஜனாதிபதி ஒருவர், இவ்வாறான வரவேற்பில் பங்கேற்பதில்லை என்றும், இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.