Breaking News

புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

மூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளதாக,இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


நேற்று காலை ஜனாதிபதி,அவரது பாரியார் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், ஜனாதிபதியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, பிரித்தானியாவுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிசும் லண்டன் சென்றுள்ளார்.

லண்டனில் தங்கியிருக்கும் போது, இலங்கை ஜனாதிபதி பிரித்தானியத் தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு ஆகியவற்றைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அதேவேளை, நாளை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும் கொமன்வெல்த் நாள் ஆராதனை மற்றும் வரவேற்பில், இலங்கை ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இதில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் உள்ளிட்ட அரச குடும்பத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனையும் இலங்கை ஜனாதிபதி சந்தித்துப் பேச வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.