Breaking News

தமது கட்சியில் இணையுமாறு வடக்கு முதல்வருக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு!

தங்களது கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் செய்திச் சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் கருத்துக்களையே கூட்டமைப்பின் கருத்தாக சர்வதேசம்கூட ஏற்றுக் கொள்கின்ற நிலையில், வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிப்பதில் அர்த்தமில்லை.

ஏனென்றால் அவரைத் தாண்டிதான் சம்பந்தன் ஐயாவின் கருத்தை உலகம் ஏற்றுக் கொள்ளும். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேர்மையாக செயற்பட வேண்டும் என்று எண்ணினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்து செயற்பட முடியும் என்பதோடு எம்முடன் இணையவும் முடியும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதை அவர் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்துகொண்டுதான் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். எனவே இதனை நாங்கள் ஒரு தேர்தல் நாடகம் என்றே கூறுகின்றோம்.

எமக்கும், அவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இருந்த போதிலும், அண்மைக்காலமாக அவர் வெளியிட்டுவரும் கூற்றுக்களை நாங்கள் வரவேற்றிருப்பது உண்மை என்று அவர் கூறினார்.