Breaking News

மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயார் - சுஷ்மா உறுதி

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய மக்களவையில் விவாதிக்கத் தயார் என்று, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை குரல் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், தீர்வு காணப்படாத தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர். 

இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினர். இதையடுத்து, குறுக்கிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயார் என்று தெரிவித்தார். 

மக்களவை புதன்கிழமை காலை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும் அவை அலுவல்கள் வழக்கம் போலத் தொடங்கின. கேள்வி நேரம் முடிந்த சிறிது நேரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அண்மையில் மோரீசஸ், செஷல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அரசு முறைப் பயணம் குறித்த விளக்க அறிக்கையை அவையில் வாசித்தார். 

அப்போது, இலங்கைப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான ஒத்துழைப்புகள், அந்நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சுஷ்மா சுவராஜ் எடுத்துரைத்துவிட்டு அமர்ந்தார். 

இதையடுத்து, கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவைத் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை உடனே எழுந்து, "பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியின் இலங்கை பயணத்திற்குப் பிறகு, இந்திய மீனவர்கள், தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைப் பிரதமர் கூறியுள்ளார். 

நமது மீனவர்கள் அங்கு சென்றால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிடுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்? இது முக்கியமான பிரச்சினை. ஏற்கனவே தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆகவே, இப்பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்´ என்று வலியுறுத்தினார். 

இதைத் தொடர்ந்து, அவையில் இருந்த அதிமுக குழுத் துணைத் தலைவர் பி. குமார், ஆர்.வனரோஜா, கே.ஆர்.பி. பிரபாகரன், கே.கோபால், ஜெயசிங் நட்டர்ஜி உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் எழுந்து நின்றவாறு இக்கோரிக்கையை வலியுறுத்தினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சிலரும் எழுந்து நின்று ஆதரவுக் குரல் எழுப்பினர். 

அப்போது, "இதுதொடர்பாக விதி எண் 193-இன் கீழ் விவாதம் நடத்த உறுப்பினர்கள் விரும்பினால், நான் தயாராக உள்ளேன்´ என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இதையடுத்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், "இது குறித்து விவாதிக்க விதி எண் 193-இன் கீழ் நோட்டீஸ் அளித்தால் நேரம் ஒதுக்கப்படும்´ என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைதியடைந்து தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். 

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதைப்போல், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் விவாதிப்பதற்காக விதி எண் 193-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன என தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.