Breaking News

வடபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குடியிருப்புக்களாக மாறக்கூடாது - வசந்த

வடபகுதி தமிழர்களுக்கு சொந்த காணி பகிர்ந்தளித்தமை தவறில்லை என தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடக பேச்சாளரும் பேராசிரியருமான வசந்த பண்டார அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி விட்டு அவ்விடத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடபகுதி தமிழ் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளியிடமாட்டோம். அந்த மக்களுக்கு காணி வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்ற கருத்திலும் நாம் உறுதியாகவுள்ளோம். ஆனால் அதற்காக வடக்கில் பல விவசாய நிலங்கள் உள்ளது. அவற்றைக் கொடுத்தால் அதனால் அம்மக்கள் பயனடைவர். அவர்களது பொருளாதார தொழில் தேவைக்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வர்.

மாறாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை மக்களுக்கு வழங்குவதால் நாட்டின் தேசிய பாதுகாப்பு சீர்குலைவது மட்டுமன்றி மக்களுக்கு பொருத்தமானதொரு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்வது கடினமாயிருக்கும். இவ்வாறிருக்க அமைச்சர் சுவாமிநாதன் சம்பூர் கடற்படை முகாமை நீக்கி பொது மக்களுக்கு அவ்விடங்களை கையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடற்படை தளங்களோ அல்லது அதியுயர் பாதுகாப்பு வலயத்திலோ மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொடுக்க முடியாது. அத்துடன் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்த சூழல் பொருத்தமானதாக அமையாது.

இப்போது ரணில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரித்து வழங்கியுள்ள காரணத்தால் அது தொடர்பில் பேசுவதில் பயனில்லை. ஆனால் இதன் பின்விளைவுகளை ரணில் சந்திப்பார் என்பது உறுதி.

பெங்கமுவே நாலக்க தேரர்

ரணில் - மைத்திரி கூட்டாட்சியில் தேசிய அரசு என்ற பெயரில் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரக்கட்சியின் துரோகிகள் என தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் உறுப்பினர் பெங்கமுவே நாலக்க தேரர் வடக்கே இருந்த 2400 சிங்களவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் - மைத்திரியின் கூட்டாட்சியில் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் இணைந்து கொண்டுள்ளவர்கள் தேசிய துரோகிகளாக கருதப்பட வேண்டியவர்கள். அவர்கள் நாட்டு நலன்கருதி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. தமது சொந்த தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் அதிகார குறைப்பும் பிரிவினைவாதிகளை வலுவடையச் செய்யும். இதனை உணர்ந்து கொண்டுள்ள மக்களுக்காக மஹிந்த மீண்டும் வர வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.