Breaking News

மகிந்தவை அரசியலுக்கு வர மைத்திரி விடமாட்டாராம் -அஜித் பெரேரா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், மீண்டும் அரசியலுக்கு வரமுடியாது என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “இப்போது இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். மகிந்த ராஜபக்ச அதில் ஒரு உறுப்பினர் மட்டுமே.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தனது கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கமாட்டார். எனவே, அவர் தனக்கென புதிய அரசியல் கட்சியொன்றை அவர் உருவாக்க வேண்டியிருக்கும் அல்லது வேறு அரசியல் கட்சியில் போட்டியிட வேண்டியிருக்கும்.

கடந்த ஜனவரி 8ம் நாள் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச முன்னரை விடவும் இப்போது மேலும் பலவீனமடைந்துள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமது கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிடவிருப்பதாக, இலங்கைத் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்திருந்தார்.

இதற்காக அவர், தனது கட்சியின் சின்னமான கங்காருவுக்குப் பதிலாக வேறொரு சின்னத்தை ஒதுக்கித் தருமாறு இலங்கை தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.