பாராளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமாகலாம் - ஜனாதிபதி
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.
இதன்போதே அவர், பாராளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நிறைவடையும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் தேர்தலை நடத்தும் வகையில், ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நேற்று பாராளுமன்றக் கட்டடத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர் கரு ஜெயசூரிய ஆகியோரைச் சந்தித்த ஜனாதிபதி, வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடினார்.
இதனிடையே, தேர்தல் தொகுதிகளை மீளவரையறுப்பது குறித்து தேர்தல் ஆணையாளர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், இந்தப் பணிகளை ஒரு மாதத்துக்குள் பூர்த்தி செய்ய முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாகவும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.