பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷல்!
ஜெனரல் சரத் பொன்சேகா தென்காசியப் பிராந்தியத்தில் பீல்ட் மார்ஷலாக, பதவி உயர்த்தப்படும் நான்காவது இராணுவத் தளபதியாக இருப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா வரும் 22ம் நாள் பீல்ட் மார்ஷலாகப் பதவிஉயர்த்தப்படவுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்திருந்தது. இலங்கையில் பீல்ட் மார்ஷல் பதவிநிலை முதல்முறையாக உருவாக்கப்பட்டு, சரத் பொன்சேகா அந்தப் பதவி நிலைக்குத் தரமுயர்த்தப்படவுள்ளார்.
அதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வல்லமைமிக்க நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியப் பிராந்தியத்திலேயே, பீல்ட் மார்ஷல் பதவிநிலையை மூன்று இராணுவத் தளபதிகள் தான் ஏற்கனவே பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதிகளான சாம் மானெக்சா 1973ம் ஆண்டிலும், கே.எம்.கரியப்பா 1983ம் ஆண்டிலும், பீல்ட் மார்ஷலாகப் பதவியர்த்தப்பட்டிருந்தனர். அதுபோல, பாகிஸ்தானின் அயூப் கான் 1965ம் ஆண்டு பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டிருந்தார். இவர்களையடுத்து, தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக ஜெனரல் சரத் பொன்சேகா பதவிஉயர்த்தப்படவுள்ளார்.