போர்ட்சிற்றி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது!
ஊடக அறிக்கை மூலமோ அல்லது வேறு அறிவித்தல்கள் ஊடாகவோ கொழும்பு துறைமுக நகர் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திவிட முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ள போதிலும் குறித்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பதிலளித்த பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா, குறித்த திட்டத்தை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திற்கு முறைப்படி அறிவிப்பு விடுத்தால் மாத்திரமே வேலைத்திட்டம் கைவிடப்படும் என விளக்கமளித்தார்.
இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் சீன நிறுவனம் ஊடக அறிக்கை, பத்திரிகைகள் போன்றவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்காது என்றும் தெரிவித்தார். எனவே எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் இது தொடர்பான முறையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா கூறினார்.