எதிர்க்கட்சித் தலைவர் யார்? நிமல், தினேஷ் தரப்பில் கையெழுத்து வேட்டை
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவா? தினேஷ் குணவர்த்தனவா? என்பதை தீர்மானிப்பதற்காக எம்.பி.க்கள் மத்தியில் கையெழுத்து வேட்டை மும்முரமாக இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஒற்றுமைப்படுத்த அவசரமாக கூடி தீர்மானிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுதந்திர கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான டப்ளியூ.ஜே.எம்.செனவிரத்னவிடம் கேட்டப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தோர் மாற்றுக் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துக்கொள்வது தொடர்பாக கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேவேளை கூட்டங்களில் கலந்துரையாடுவதும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதனையும் எதிர்க்க முடியாது. ஆனால் சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் மாற்றுக்கட்சிக் கூட்டங்களில் கலந்துக்கொள்வது மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்காமை தொர்டபாக கட்சியின் மத்திய குழு கூடி இறுதிமுடிவு எடுக்க வேண்டும்.
மக்கள்
கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளால் மக்கள் இன்று குழம்பிப்போயுள்ளனர். தீர்மானம் எடுக்க முடியாது எவர் கூட்டம் வைத்தாலும் அக்கூட்டங்களில் கலந்துக்கொள்கின்றனர்.
மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமென்ற வலியுறுத்தலும் மேலோங்கி வருகின்றது. எனவே இவையனைத்தையும் ஆராய்ந்து சுதந்திரக்கட்சியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒற்றுமை
அதேவேளை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, சந்திரிக்கா மூவரும் ஓரணியில் ஒன்றுப்பட வேண்டும். இல்லாவிட்டால் சுதந்திரக் கட்சி இரண்டு மூன்றாக துண்டாடப்பட்டு விடும். எனவே கட்சியை பாதுகாக்க இவர்களின் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும். இல்லாவிட்டால் தேர்தல் வெற்றிப்பெறவும் முடியாது. கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியாது.
எதிர்கட்சித்தலைவர்
எதிர்கட்சித் தலைவர் பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கான தகுந்த பதிலை சபாநாயகர் வழங்குவார். அதேவேளை எதிர்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா பதவி வகிக்க வேண்டும். என்று வலியுறுத்தும் மகஜரொன்று எதிர்கட்சி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு வருகின்றது.
மறுபுறம் தினேஷ் குணவர்த்தனவை நியமிக்குமென்று கையெழுத்து பெறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் இறுதி முடிவு சபாநாயகர் கையிலேயே தங்கியுள்ளது என்றும் செனவிரத்ன எம்.பி தெரிவித்தார்.