மகிந்தவை நாங்கள் தோற்கடிக்கவில்லை – மறுக்கிறது பிரித்தானியா
இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.
பிரித்தானியாவின் எம்.16 புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இந்திய அமெரிக்க புலனாய்வுப் பிரிவுகள் மீது மகிந்த ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்,
“பிரித்தானிய புலனாய்வு அமைப்பான எம்16 அல்லது அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏயின் விளைவாக இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகவில்லை. இலங்கை மக்களே அமைதியான முறையில் ஜனநாயக ரீதியாக புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.