Breaking News

பாட்டி-காகம்-நரி தமிழர்-சம்பந்தர்-ரணில் -ஒற்றுமை எப்படி?

பாட்டி வடை சுட்ட கதை இற்றைக்கு இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிரேக்க நாட்டுக்குரிய இக்கதை தென்னாசிய நாடுகள் முழுவதிலும் பரவி அறியாதார் எவரும் இல்லை என்றாயிற்று.

ஒரு மரத்தின் கீழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். காகம் ஒன்று வடையைக் கொத்திச் சென்று மரத்தில் உட்கார்ந்திருந்தது. அந்நேரம் அந்தப் பக்கமாக நரி ஒன்று வந்தது. காகத்தின் வாயில் வடை இருப்பதைக் கண்ட நரி, காக்கையாரே! நீ நன்றாய் பாட்டுப் பாடுவீராமே! எங்கே ஒரு பாட்டுப் பாடும் பார்க்கலாம் என்றது.

நரியின் வார்த்தையை உண்மை என்று நம்பிய காகம் வாயைத் திறந்து கா... கா... என்றது. அவ்வளவுதான் காகத்தின் வாயில் இருந்து வடை கீழே விழ, அதை நரி கெளவிக் கொண்டோடியது. இந்தக் கதையில், நரியின் தந்திரம் தோற்கடிக்கப்பட்டதாக மாற்றவேண்டும் என நவீன சிந்தனையாளர்கள் நினைத்தனர்.

காக்கையாரே! எங்கே ஒரு பாட்டுப்பாடும் பார்க்கலாம் என்று நரி கூறியபோது, காகம் வாயில் இருந்த வடையை தன் காலில் வைத்துக் கொண்டு, கா... கா... என்று கரைய, ஏமாற்றத்துடன் நரி சென்றது என கதையை மாற்றியமைத்தனர். மாற்றம் வேண்டும் என்பதற்கான ஒரு ஏற்பாடே இது அல்லாது வேறொன்றும் இல்லை.

ஏமாற்றம் களையப்படவேண்டும் என்று நினைத்திருந்தால், பாட்டி தான் சுட்ட வடையை ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருந்தார். இதனால் காகம் வடையைத் தூக்கவும் முடியவில்லை. நரியின் அவதந்திரத்திற்குச் சந்தர்ப்பமும் இல்லாமல் போயிற்று என்பதாகக் கதை மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது நம் சிற்றறிவின் சிந்தனை.

ஏதோ! கதை எப்படி மாற்றப்பட்டாலும் எங்களுக்குத் தெரிந்த கதை, பாட்டி சுட்ட வடையை காகம் கொத்திச் செல்ல, காகத்தின் வாயில் இருந்த வடையை தனது புத்தியைப் பயன்படுத்தி நரி தனதாக்கிக் கொண்டது என்பதுதான். ஆக, பாட்டி-காகம்-நரி என்ற கதையில் முதலாவதாக ஏமாந்தது பாட்டி. இரண்டாவது ஏமாற்றம் காகத்திற்கு.

இந்த வரிசையில் முதல் இழப்பு பாட் டிக்கு என்பதை எவரும் மறுக்க முடியாது. பாட்டி சுட்ட வடைக் கதையை நம் நாட்டுக்கு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் அரசியல் தலைவர்களால் ஏமாந்தவர்கள் தமிழ் மக்கள். தமிழர்களை நம்ப வைத்து பதவியை தமது பக்கமாக்கிக் கொண்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர்.

இரா.சம்பந்தரை ஏமாற்றி எல்லாவற்றையும் பறித்தெடுத்து, சர்வதேச விசாரணையுமில்லை; போர்க்குற்றமுமில்லை என்பதாக சமகால நிலைமையை ஏற்படுத்தியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இந்த நிலைமையை வைத்துக் கொண்டு ஒரு நுண்ணறிவு மாதிரி அமைப்பு ஒன்றைத் தயாரித்தால், பாட்டி-காகம்-நரி தமிழர்-சம்பந்தர்-ரணில் என்பதாக அது அமையும்.

கதையில் பாட்டியும் தமிழரும் பாவம் என்பது இப்போதாவது புரியவரும். ஏமாற்றத்தைத் தடுக்க வேண்டியது காகமோ, சம்பந்தரோ அல்ல. பாட்டியும் தமிழருமே அதைச் செய்யவேண்டும். ஏனெனில் வடையின் நட்டம் பாட்டிக்கு. உரிமையின் இழப்பு தமிழருக்கு.