மேற்குலக உறவுகளுக்காக சீனாவை இழக்க முடியாது – இலங்கை
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை இலங்கை இழக்காது என்றும் இலஙகையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, செக் குடியரசு போன்ற நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு துணையாக இருந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும், இந்த நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவளித்தன. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அமெரிக்காவினது முக்கியமான ஆதரவும் கிடைத்திருந்தது.
சீனா ஒரு உண்மையான நண்பன். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பீஜிங் பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும். இலங்கை ஜனாதிபதி சீனப் பயணத்தின் மூலம், ஒரே நேரத்தில் சீனாவுடனும், மேற்குலகத்துடனும், நெருக்கமான உறவைப் பேண முடியாது என்று சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் புதிய அரசாங்கம் அணிசேரா கொள்கையையே கடைப்பிடிக்கிறது. நாம் எந்த நாட்டுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. எல்லோருடனும் நெருங்கிய உறவையே வைத்திருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.