நீதிக்காக மோடி குரல் கொடுக்க வேண்டும் - மன்னார் ஆயர்
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உரிமை இழந்த மக்களாக உள்ளனர் எனும் யதார்த்தத்தை இந்தியப் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் பயணமாக வருகின்ற இந் நிலையிலேயே மன்னார் ஆயரின் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மக்கள் தொடர்ந்து உரிமைகள் இழந்த நிலையில் வாழ்ந்து வருவது, வேதனையாக உள்ளது என்பதை இந்தியப் பிரதமர் மனதில் உள்வாங்கி அதற்கேற்ற வகையில் தீர்வுக்கான வழியை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
நீதியின் அடிப்படையில், பல்லின மக்கள் ஒன்றாக சம உரிமையுடன் இந்தியாவில் வாழ்வதைப் போல இலங்கையிலும் ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்த நரேந்திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தானும் தமிழ்ச் சமூகமும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளும், அரசியலும், நல்வாழ்வும் இந்திய அரசியலோடு பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்தியா எடுக்கிற முடிவின் அடிப்படையில்தான் சர்வதேச சமூகமும் இலங்கைப் பிரச்சினையை நோக்குகிறது என்பதையும் இந்தியப் பிரதமர் உணர வேண்டும் எனவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
நீடித்த ஒரு சமாதானமும், நிரந்திரமான அரசியல் தீர்வும் இலங்கையில் ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பும் நல்லெண்ணமும் இன்றியமையாதவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் தனது இலங்கை பயணத்தின்போது, யாழ்ப்பாணம், தலைமன்னார் உட்பட பல இடங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.