சீன நிறுவனங்களின் நலன்களை இலங்கை பாதுகாக்க வேண்டும்! சீன ஜனாதிபதி வலியுறுத்தல்
இலங்கையில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களின் சட்டரீதியான நலன்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக, சீனாவின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேற்று பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போதே, சீன நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்குமாறு, சீன அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பு பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிப்பதாக இருப்பதாகவும், இது எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல், வெற்றியளிப்பதாக இருக்கிறது என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை – சீனா இடையிலான மரபுவழி நட்புறவு கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும், சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு .லங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்ந்து பேணப்படும் என்று உறுதியளித்தார். அதேவேளை, இருதரப்பும், சுகாதாரம், விவசாயம், விஞ்ஞானம், சுற்றுலா, மனித வளங்கள், மற்றும் இராணுவ பரிமாற்றங்கள், பிராந்திய விவகாரங்களில், இருதரப்பும் ஒத்துழைப்புகளை விரிவாக்க இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் சின ஜனாதிபதி வலியுறுத்தியள்ளதாகவும், சீன அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.