புலிகள் தடை வெற்றி! தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு!
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்படாத வகையில் அரசியல் தீர்வு திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி படைத் தலைமையக மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தகர்த்த ஐரோப்பிய ஒன்றியம், தான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தடையை நீக்கியுள்ளமை வெற்றி என்றும் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நாவில் சவாலை வெற்றிகொள்ள முடிந்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு தங்களுடைய காணியில் வாழ்வதற்கு விருப்பம் இருக்கும் என்பதால் அவர்களை அவர்களது காணியில் மீள்குடியேற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் யுத்தம் முடிந்துள்ள நிலையில் தற்போது கடந்த யுத்த காலத்திலேயே வாழ முடியாது என்றும் எதிர்காலத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் பயங்கரவாத யுத்தம் ஏற்பட காரணமாக இருந்த அரசியல்வாதிகள் இன்று ஒன்றுசேர்ந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சில் இணைந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என பிரதமர் குறிப்பிட்டார். இலங்கை பாதுகாப்பு தரப்பினர் ஆங்கிலம் மற்றும் கணினி கல்வியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்கால நாட்டின் முன்னேற்றத்திற்கு அது பங்களிப்பு செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.