ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு
மகிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ஐ.தே.க.வே ஊக்குவிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தலைமைப் பதவி இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், கட்சியின் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியவராக சந்திரிகா உள்ளார். கட்சியின் கொள்கை வகுப்பாளராகவும், கட்சி மறுசீரமைப்பு பணிகளையும் சந்திரிக்காவே மேற்கொண்டு வருகின்றார்.
இந்தநிலையில், மகிந்தவுக்கு ஆதரவான குழுவினர் கொடுக்கும் அழுத்தங்கள் அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60 உறுப்பினர்கள் மகிந்தவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே ஐ.தே.க. மீது அவர் குற்றச்சாட்டை இப்போது முன்வைத்திருக்கின்றார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஏற்கனவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டால் அது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் எனவும் அதனையே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். மகிந்தவின் அரசியல் மீள் பிரவேசம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் தந்திரோபாய நகர்வாக சுட்டிக்காட்டியுள்ளார்.