இலங்கையை இலகுவாக வென்றது தென்னாபிரிக்கா
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
சிட்னியில் சற்று முன்னர் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து துடுப்புடன் களமிறங்கிய அந்த அணியினர் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாது வரிசையாக வௌியேறினர்.
இலங்கை சார்பில் ஓரளவு பொறுப்புடன் ஆடிய குமார் சங்கக்கார 45 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதுவே இலங்கை அணி வீரர் ஒருவர் இன்று பெற்ற அதிகபட்ச ஓட்டமாகும். இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.
பின்னர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 37.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 133 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் இம்ரான் தாரீக் 4 விக்கெட்டுக்களையும் டுமினி 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
குறிப்பாக அடுத்தடுத்த பந்துகளில் மெத்தியூஸ், குலசேகர மற்றும் கௌஷல் ஆகியோரை வௌியேற்றி டுமினி ஹெட்ரீக் விக்கெட்டுக்களை கைப்பற்றியமை விஷேட அம்சமாகும். இதனையடுத்து 134 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 18 ஓவர்களில் 134 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியைத் தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பில் டி காக் (Quinton de Kock) 78 ஓட்டங்களுடனும் டு பிளெஸிஸ் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக இம்ரான் தாரிக் தெரிவு செய்யப்பட்டார். இதன்படி உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு தென்னாபிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.