இலங்கைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை!
இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாதென, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் செயித் ரா-அத் அல்-ஹுசைன் எச்சரித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத்தொடரில் தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசாரணைகளின்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் மக்களுடன் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் ஆழ்ந்த ஆலோசனைகளை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் வகையில், இது செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கையை ஒத்திவைக்கும் தீர்மானமானது, இலங்கை அரசின் செயற்பாடுகள் மற்றும் ஐ.நாவுடன் ஒத்துழைப்பு வழங்க விரும்பும் முறைமை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர ஆலோசனைக்கு பின்னர், விசாரணை குழுவில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய, குறித்த அறிக்கையை வெளியிடுவதை செப்டம்பரில் நடைபெறவுள்ள 30ஆவது அமர்வு வரை ஒத்திவைக்குமாறு தான் பரிந்துரை செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுமென அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.