Breaking News

மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்! தாக்குதல் நடத்தியவர் பொலிஸில் சரண்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்றிரவு இனந் தெரியாதவர்களினால் மிகமோசமாக தாக்கப்பட்டு படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டு உள்ளார். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் மீது தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. பொலனறுவையில் ஹதரஎல என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு வாகனத் தரிப்பிடமொன்றிற்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த சிறிசேன பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கத்தி போன்ற கூரிய ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது நிலைமை ஆபத்தானதாக இருந்தமையால், நேற்றிரவே அவர் உலங்குவானூர்தி மூலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளையில், தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிப்பதற்காக நேற்றிரவே பாரிய தேடுதல் நடவடிக்கைகயை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்திருக்கின்றார். பொலநறுவையிலுள்ள பக்கமுன பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார். சந்தேக நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.