Breaking News

மோடிக்கு இளவாலை இளைஞா் கைகுலுக்கிய விவகாரம்! நிராகரிக்கிறது இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தவாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த போது அவரது பாதுகாப்பு ஊடறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இளவாலையில் கடந்த 14ம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வை முடித்துக் கொண்டு, காரில் ஏறச் சென்ற போது, பாதுகாப்பு வளையத்தை் ஊடறுத்துச் சென்ற இளைஞர் ஒருவர், மோடியுடன் கைகுலுக்க முயன்றார்.

இதுகுறித்து இந்திய அரசாங்கம் உயர் மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு வளையம் ஊடறுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இது உண்மையைப் போல உருவாக்கப்பட்ட செய்தி என்று குறிப்பிட்டுள்ள அவர், நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட பல காணொளிப்பதிவுகள் உள்ளன என்றும், அவற்றில் இதுபற்றிய எந்த தகவலும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மோடியுடன் கைகுலுக்க முயன்றதாக, இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட இலங்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் ஒருவர், பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.