விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் தலைமை தேவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய அனைவரும் தமிழ் இனத்தின் பற்றுறுதி மிக்க விசுவாசிகள் என்றொரு எடுகோள் இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப் பேற்பது பொருத்துடையது.
ஆனால் தமிழ் இனத்திற்கு இம்மியும் விசுவாசம் இல்லாத- தமது சுயலாபமே முழுவதும் என்ற மனநிலை கொண்டவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை முதல்வர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்பது பொருத்துடையது அல்ல.
அவ்வாறு பொறுப்பேற்பதன் மூலம் விக்னேஸ்வரனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிப்படுத்த முடியும் என்று நினைப்பதும் நடைமுறைக்குச் சாத்தியமன்று. அதேநேரம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கான பொருத்தமான; உத்தமமான ஒரு தலைவர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த அடிப்படையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மேற்போந்த கோரிக்கை சுயநலம் அற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலொழுங்கில் உள்ள பிறழ்வுகளின் அவதானிப்பின் அடிப்படையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இக்கோரிக்கையை காத்திரமான முக்கியத்துவத்தோடு தமிழ் மக்கள் நோக்க வேண்டும். ஏனெனில், வட பகுதிக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எங்கள் தமிழர் தாயகத்தின் முதல்வரைச் சந்திக்க மறுத்தார். இந்த மறுதலிப்போடு யாழ் வந்த பிரதமர் ரணிலை, கரம் கூப்பி வரவேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முண்டியடித்தனர் எனில் நாம் எங்கே? போகிறோம் என்பது புரிகிற தல்லவா!
ஆகையால்தான் கஜேந்திரகுமாரின் கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கருசனை கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றோம். அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை முதல்வர் விக்னேஸ்வரன் பொறுப் பேற்க வேண்டும் என்பதை விட, தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வருவதே பொருத்தமும் பெறுமதியுமாக இருக்கும்.
தமிழர்களின் புதிய அரசியல் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய மனம், மொழி, மெய்யால் தமிழ் இனத்தை நேசிப்போர் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ்ப் பற்றுறுதி கொண்ட புத்திஜீவிகள் இணைந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவும் உரிமையும் கிடைக்கும். இல்லையேல் தமிழர் அரசை, பிரதமர் ரணில் அவமதித்து செயற்படுவார். அதேவேளை அவரை வரவேற்க கூட்டமைப்பில் ஒரு தரப்பு முண்டியடிக்கும் என்பதே நிலைமையாகி விடும் கவனம்.