Breaking News

மாநிலஅரசு பரிந்துரை செய்தால் இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை!

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமுக்கு நேற்று சென்ற அவர், அகதிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அகதிகளின் நலன்களை மேலும் அதிகரிப்பதற்கான சில பொறிமுறைகளை முன்னெடுத்து வருவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தவகையில் தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குமாறு மாநில அரசாங்கம் பரிந்துரை செய்தால், மத்திய அரசாங்கம் அதுகுறித்து ஆராயும் என அமைச்சர் றிஜ்ஜூ மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டு அகதிமுகாங்களில் தற்போது 100,000 வரையான ஈழத்தமிழர்கள் தங்கியுள்ளனர். 1983ல் சிறிலங்காவில் இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்திலிருந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டு அகதி முகாங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.