நாளை யாழ் வருகிறார் ரணில்! விக்னேஸ்வரனை சந்திக்க மறுப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், முதலமைசரின் சந்திப்பு திட்டமிட்டமுறையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை தொடர்பாக வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சரை ‘பொய்யர்’ எனவும் வர்ணித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் யாழ்ப்பாணம் சென்ற ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சருடன் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டார். இருவருக்கும் இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெறுவதை அப்போது அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில்தான் வடபகுதியில் பல நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சருடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், முக்கிய பல பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார். ஞாயிறு தினத்தன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன், முல்லைத்தீவிற்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜனாதிபதி மைத்திரிபாரல சிறிசேன ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரும் கடந்த திங்கட்கிழமை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டனர்.இந்நிலையில் பிரதமர் மாத்திரம் நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளமை விஷேட அம்சமாக கருதப்படுகிறது.
இதன்படி வௌ்ளிக்கிழமையான நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லுர் கோயில், நாவலர் ஜூம்மா மஸ்ஜித் ,மற்றும் ஆதினம் தேவஸ்தானம் ஆகிய வணக்கஸ்தளங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்படவுள்ளார்.மேலும் யாழ் .மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், தென் இந்திய அருட்தந்தை டெனியல் தியாகராஜா ஆகிய மதத்தலைவர்களின் ஆசியையும் பெறவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது மீள்குடியேற்ற வேலைத்திட்டம் மற்றும் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் தொடர்பிலான கலந்துரையாடிலும் பிரதமர் பங்கு கொள்ளவுள்ளார்.மேலும் பெண்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.அத்தோடு மீனவர்களையும் சந்தித்து பேசவுள்ளார். இதன் பின்னர் பருத்திதுறையிலுள்ள பிரபல பாடசாலையாக கருதப்படும் ஹார்ட்லி கல்லுரி நிகழ்வொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை யாழ் மாவட்ட தேசிய பாடசாலை அதிபர்களை சந்தித்து தற்போது மாவட்ட பாடசாலையில் காணப்படும் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வடக்கு விஜயத்தின்போது நெடுந்தீவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்தோடு இந்த விஜயத்தின் போது பலாலி படைத்தலைமையகத்திற்கு சென்று பொலிஸ், விமானப்படை உள்ளிட்ட முப்படை அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் பலாலி பாதுகாப்பு தளத்தையும் பார்வையிடவுள்ளார். இதனை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,கிளி நொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.
பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்கவின் மூன்று நாள் விஜயத்தில் இறுதியாக முல்லைதீவிற்கு சென்று அங்குள்ள பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த விஜயத்தினை பிரதமர் முன்னெடுக்கவுள்ளமை விஷேட அம்சமாகவே கருதப்படுகிறது.