Breaking News

புதிய அரசாங்கத்துக்குள் முரண்பாடு!

பொதுத் தேர்தல் விடயத்தில் ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலை காலம்கடத்தாது ஜுன் ஆரம்பத்தில் நடத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்திவரும் நிலையில், பொதுத் தேர்தலை தற்போதைக்கு நடத்தாது ஒத்திவைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாலேயே இந்த சிக்கலான நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி புதிய தேர்தல் முறைமையின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தருமான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்றைய தினம் கொழும்பில் அறிவித்தார்.

அனைத்துத் தேர்தல் தொகுதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கக் கூடிய முன்னைய தொகுதிவாரி தேர்தல் முறைமையையும், நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைமையையும் ஒருங்கிணைத்து புதிய தேர்தல் முறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் கீழ், இம்முறை பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திலுள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்திவருகின்ற போதிலும், புதிய தேர்தல் முறைமையை தயாரித்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையாளர் உட்பட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறிகின்றார்.

இதற்கமைய புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் பொதுத் தேர்தலை நடத்துவதாயின் எதிர்வரும் பொதுத் தேர்தலை குறுகிய காலத்திற்கு ஒத்திவைப்பது பெரும் சிக்கலாக இருக்காது என்றும் அமைச்சர் ராஜித்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இந்த நிலைப்பாட்டில் இருந்தாலும், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததற்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் களைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.

புதிய அல்லது தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் கபீர் ஹசீம்  நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.