மோடியின் விஜயமன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை தரவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இரு நாள் விஜயத்தினை மேற்கொண்டு நாளைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகைதரவுள்ளார்.
இந்நிலையில் நாளை மறுதினம் யாழ்.குடாநாட்டுக்கும் அவர் வருகைதரவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஒழுங்கமைத்துள்ள நிலையில் யாழ்.பொது நூலகத்திற்கு முன்பாக 14ம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் குறித்த உன்மைநிலை, மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் மேற்படி பிரச்சினைகளை மையப்படுத்தி போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு யாழ்.பொது நூலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.