Breaking News

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ரணிலின் கருத்து! கேள்வி எழுப்புவாரா சுஷ்மா

எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்புவார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவோம் என தெரிவித்தார். எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசுவார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், மீனவர்கள் பிரச்சினை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார பிரச்சினை. இந்த விவகாரத்தில் இலங்கையுடன் இணைந்தே தீர்வு காண விரும்புகிறோம்.

அமைதியாகவும் நட்பு ரீதியாகவும் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது சுஷ்மா சுவராஜ் மீனவர்கள் விவகாரம் குறித்து பேசுவார்” என்று தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பிரதமரின் இந்தக் கருத்து பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போது சுஷ்மா சுவராஜ் எழுப்புவார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.