சீனத் தலையீடுகள் குறித்து இலங்கையுடன் மோடி பேசுவார் - குவாமர் அகா
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து, இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர் குவாமர் அகா தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புத் தளங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைப்பதே, சீனாவின் திட்டமாகும். தனியே இந்தியா மட்டுமன்றி, தனியே இந்தியா மட்டுமன்றி, இலங்கையும் கூட தனது நாட்டை சீன இராணுவம் பயன்படுத்துவதை விரும்பவில்லை.
இலங்கையின் புதிய அரசாங்கம் இதையெல்லாம் விரும்பவில்லை. துறைமுகங்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஏனையவற்றை சீனா இந்தப் பிராந்தியத்தில் நிறுவுவது எமக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. அவர்களின் கடற்பயண வழிகள், பட்டுப்பாதை, வீதி இணைப்புகள், தொடருந்துப் பாதை இணைப்புகள், எல்லாமே, அடிப்படையில் இந்தியாவை சுற்றிவளைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான்.
இந்தியப் பிரதமர் இந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார். இந்தியாவுக்கு எதிராக தமது நாட்டை மற்றொரு நாடு பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை வாக்குறுதி அளித்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.