Breaking News

காணாமற்போன மகன் வெலிக்கடைச் சிறைச்சாலையில்! தாயார் வழக்கு

பலவந்தமாகக் கடத்தப்பட்டுக் காணாமற் போனோர் குறித்துப் புதிய அரசின் மந்தமான செயற்பாடுகளுக்கு மத்தியில் ஏழு வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுக் காணாமற் போனதாகக் கருதப்படும் தனது மகன் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப் பட்டிருப்பதாகக் கோரித் தாயார் இன்று நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இனந்தெரியாத நபர்களால் அழைத்து செல்லப்பட்டு காணாமற் போயிருந்த தனது மகனின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியானது என்றும், இதன் பிரகாரம் அவன் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தே மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த அந்தத் தாயார் தனது மகனை மீட்டுத்தருமாறு இன்று திங்கட்கிழமை சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவது:- கடந்த 11.09.2008 அன்று மன்னார், பள்ளிமுனையை சேர்ந்த அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ (வயது 24) என்பவர் தனது உறவினர் வீட்டில் இருந்தபோது இனந்தெரியாத நபர்களால் அழைத்து செல்லப்பட்டார் என்றும், அவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த இளைஞரின் தாயார் பல இடங்களிலும் முறைப்பாடு செய்து மகனைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் குறித்த இளைஞனும் கலந்துகொண்ட படம் இணையதளத்தில் வெளியாகியது. இதைப் பார்த்த தாயார் அந்தப் படத்தில் தனது மகனை இருப்பதனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்தத் தாய் இன்று திங்கட்கிழமை சட்டத்தரணி கே.எஸ்.ரெட்ணவேல் ஊடாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிவான் அலெக்ஸராஜா ஆசீர்வாதம் கிறேசியன், விசாரணையை மேற் கொண்டதுடன், காணாமற்போன இளைஞன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பாரானால் அவர் எதற்காக கைதுசெய்யப்பட்டார், தடுத்துவைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன? போன்ற விவரங்களை பெற்று மன்றில் சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் இவ்வழக்கை மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி வரை விசாரணைக்காக ஒத்திவைத்தார்