Breaking News

ஒரு வருடத்தின் பின்னர் தாயுடன் இணைந்தார் விபூசிகா

பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த விபூசிக்கா, ஒரு வருடத்திற்குப் பின்னர் தனது தாயான ஜெயக்குமாரியுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, பாலேந்திரன் ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளான விபூசிக்காவும் குற்றப் புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர், தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதேவேளை, மகளான விபூசிக்கா கிளிநொச்சி மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் 362 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த ஜெயக்குமாரி, கடந்த 10ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து தனது மகளை பொறுப்பேற்பதற்காக கடந்த 14ஆம் திகதி குறித்த சிறுவர் இல்லத்திற்குச் சென்ற ஜெயக்குமாரியிடம், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் நீதிமன்ற உத்தரவையும் கொண்டுவருமாறு சிறுவர் இல்ல அதிகாரிகள் பணித்தனர்.

இதனையடுத்து, தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஜெயக்குமாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீதான விசாரணை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படபோது, விபூசிக்காவை தாயான ஜெயக்குமாரியுடன் செல்ல அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.