Breaking News

சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!


திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் அமையவுள்ள இந்திய உதவியுடனான சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு பிரதேச மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் ஆட்சேபனைகளும் எழுந்துள்ளன.

மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார வாரியத்தினால் பொது மக்கள் கருத்து அறிவதற்காக சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளதையடுத்து குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் தனியாகவும் அமைப்புகள் ரீதியாகவும் தமது எதிர்ப்புகளையும் ஆட்சேபனைகளையும் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர்.

தமது பிரதேசத்திலிருந்து மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் , 3500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களின் கையொப்பங்களை கொண்ட எதிர்ப்பு மனுக்கள் மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார வாரியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்குமான சபையின் சட்ட ஆலோசகரான முகமட் லத்தீப் பைசர் கூறுகின்றார்.

இதனைத் தவிர விவசாயம் , கால் நடை மற்றும் மீன் பிடி அமைப்புகள் தவிர 50க்கும் மேற்பட்ட அமைப்புகளும் இந்த எதிர்பு மனுக்களை அனுப்பி வைத்துள்ளதாதகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த அனல் மின் நிலயம் அமையுமா? என்ற சந்தேகங்கள் ஏற்கனவே மக்களிடம் காணப்பட்டிருந்தாலும் மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார மையத்தின் அறிக்கை வெளியான பின்னரே இதனை உறுதிப்படுத்த முடிந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

சம்பூர் பிரதேசம் தொடர்பாக மத்திய சூழல் பாதுகாப்பு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகூட வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை என கூறும் சட்டத்தரனி மொகமட் லத்தீப் பைசர், அபிவிருத்தி மூலம் கிடைக்கும் நன்மைகளை விட சூழல் பாதிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களே அதிகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சம்பூர் பிராந்திய கடலில் காணப்படும் கண்டல் மேடை எனப்படும் ஆழமற்ற கடல் பரப்பு பலகாலமாக ஏராளமான மீன்கள் வந்து இனப் பெருக்கம் செய்து விட்டு திரும்புவற்கான சாதகமான சூழலை கொண்டுள்ளது.

அனல் மின் நிலையம் காரணமாக வெளியேறும் கழிவு நீர் மற்றும் அங்கு வருகை தரும் வெளிநாட்டு கப்பல்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கசிவுகள் மீன் உற்பத்திக்கு கூட பதிப்பாக அமையும் போது, இதனால் மீனவ சமூகம் பெரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும என்றும் அந்த மீன்களை உண்ணும் மக்கள் நோய்களுக்குள்ளாக நேரிடும் என்றும் இது தொடர்பாக சட்டத்தரணி மொகமட் லத்தீப் பைசர் அச்சம் தெரிவித்துள்ளார்.