மைத்திரி அரசாங்கத்துக்கு கம்மன்பில எச்சரிக்கை!
ஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராட உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மஹிந்தவின் சூட்டை குளிராக்கவென தேர்தலை பிற்போடும் திட்டத்தை செயற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய கம்மன்பில குறிப்பிட்டார்.
தொடர்ந்து மக்களை சந்தித்து கலந்துரையாடி அரசியல் செய்வது, புதிய அரசாங்கம் தமது இயலாமையை காட்டுவது, மஹிந்த ராஜபக்ஷ மீது உயர் நிலையில் இருந்து கீழ் நிலை உறுப்பினர்கள் வரை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவரது புகழ் ஓங்கியிருப்பது போன்ற காரணங்களால் மஹிந்த ராஜபக்ஷவை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தாம் எச்சரித்ததால் அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆணையாளர்களுக்கு அளிக்காது பதவிகாலத்தை நீடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளூராட்சி சபைகள் குறித்த அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு என தெரிவித்தார்