மூடப்படும் நிலையில் பூசா முகாம்!
சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் பூசா சிறைச்சாலையை மூடும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கும் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் இதற்கிணங்க பலவந்தமாக அரசியல் கைதிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பாக நீதிமன்றத்துக்கு முன்னால் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சட்டத்தரணி ரட்ணவேல் மேலும் தெரிவிக்கையில்;
ஜெயக்குமாரி முற்றாக வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான விடுதலையை நினைத்தும் பார்த்திருக்க முடியாது. இதேவேளை மற்றைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்.
இந்நிலையில் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் பூசா சிறைச்சாலையை மூடிவிடவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் எதுவித முன்னறிவித்தலுமின்றி கைதிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். அவர்களில் பலர் புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்தங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பலவந்தமாகவே அவர்கள் அனுப்பப்படுகின்றனர். இது சட்டத்துக்கு முரணான செயலே ஆகும்.
புனர்வாழ்வுக்கு அனுப்புவதென்றால் அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்ளவேண்டும். அதனை விடுத்து பலவந்தமாக அனுப்புவதாகவே கருதுகின்றேன். கைதிகள் பலர் தாம் தவறு செய்யவில்லை தம்மை சட்டத்தின் முன் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்கின்றார்கள். ஆனால் அதனைச் செய்யாது பலவந்தமாக புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுகின்றனர் என்று கூறினார்.