மீனவர்கள் மீது தாக்குதல்! இலங்கையை எச்சரிக்க வேண்டும்
இலங்கையின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அங்கிருந்து சில கி.மீ தொலைவில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும், என்று பாமக நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமான வேளையில் ஒரு படகில் ஏறிய படையினர் அதிலிருந்த 5 மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர்.
கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 3 மீனவர்கள் முதல் உதவிக்குப் பிறகு வீடு திரும்பி விட்ட நிலையில், கனி, கலைஞானம் ஆகிய மீனவர்கள் கொடிய காயங்களுடன் இராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த கொடிய தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வருகின்றன.
கடந்த இரு நாட்களுக்கு முன் இலங்கைப் படை நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்தது. அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே மீன் பிடித்தாலும், இலங்கை படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்ப வேண்டியது தான் இலங்கைப்படையின் பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை தாக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவதையும், இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்துவதையும் ஏற்க முடியாது.
இது 22.01.2013 அன்று டெல்லியில் நடந்த இந்திய மற்றும் இலங்கை கூட்டு ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறிய செயல் ஆகும். கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,‘‘ சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன.
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எக் காலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கை படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இலங்கையின் அழைப்பை ஏற்று அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து சில கி.மீ தொலைவில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.
இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனியும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இலங்கை தூதர் மூலம் அந்நாட்டு அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும், இவ்வாறு இராமதாஸ் கூறியுள்ளார்.