பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்தியா!
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுடன் இந்தியப் புலனாய்வு அமைப்புகள், பேச்சுக்களை நடத்தவுள்ளன.
இந்தியப் புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி, ‘தி ஏசியன் ஏஜ்’ ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஐ.எஸ்.ஐக்கு ஆதரவளிக்கும், செயற்பாடுகள் குறித்து பேசப்படவுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், இராஜதந்திர போர்வையைப் பயன்படுத்திக் கொண்டு, ஐ.எஸ்.ஐயின் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று இந்தியாவின் உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறந்ததொரு கூட்டணியை உருவாக்க முயற்சித்த நிலையில், அவர்களுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்கு எமக்கு தயக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது, மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்திய, இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்கிடையில், மிகச் சிறந்த ஒத்துழைப்பு இருக்கும் என்று நாம் உணர்கிறோம்” என்று மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைக்கு மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான, உறவுகளை எல்லா மட்டத்திலும், முன்னேற்றுவதற்கான ஒரு பெரிய நகர்வு என்று கருதப்படுகிறது. முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்காலத்தில், முக்கியமான இருநாட்டு பாதுகாப்பு அமைப்புகளும், நல்ல புரிந்துணர்வுடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில், வைத்து, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐஎஸ்ஐ முகவர் ஒருவர், கைது செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் ஐஎஸ்ஐயின் செயற்பாடுகளை இந்திய புலனாய்வு அமைப்புகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றன.
சகீர் ஹூசேன் என்ற அந்த சந்தேகநபர், விசாரணையின் போது, தம்மை பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள் இருவரே, போலி இந்திய ரூபா நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகள் தயாரித்த புலனாய்வு அறிக்கையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் துணையுடன் செயற்படும் ஐஎஸ்ஐயின், இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு, இலங்கையில் இருந்து கடல் வழியான அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதானது, பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு நலன்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், இருநாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புகள் வலுவாக இருக்கும் என்றும், மூத்த புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
“கடல்வழி மிகவும் நுண்ணியது என்பதாலும், அதனை நாசகார செயல்களுக்குப் பயன்படுத்த முடியும் என்பதாலும், இதுகுறித்து நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
கடல் வழியில் கண்காணிப்புகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், எமது அதிகாரிகள் விரைவில், இலங்கை புலனாய்வு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, கொழும்பிலுள்ள பாகிஸ்தானியத் தூதரக அதிகாரிகள் சிலர், இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளை உஎவ்வாறு ஊக்குவிக்கின்றனர் என்பதை விளக்கவுள்ளனர்” என்று மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.