Breaking News

அரசியலைக் கைவிட்டார் பசில்

இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும்,  அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவே கடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல்  பிச்சாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர். இலங்கை சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், கம்பகா மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த அவரே, மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்கா வதிவிட உரிமை பெற்றவரான பசில் ராஜபக்ச, ஜனவரி 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார்.

அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட போது பெப்ரவரி 22ம் திகதி கொழும்பு திரும்புவதற்கான இருவழி விமானப் பயணச்சீட்டை கொள்வனவு செய்திருந்தார். எனினும் அவர் இன்னமும் நாடு திரும்பவில்லை. இந்தநிலையில் தாம் அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்பி வரும் திட்டமில்லை என்று தன்னிடம் பசில் ராஜபக்ச கூறியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.