ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை -சம்பந்தன்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணையில் ஒருவருக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை வந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளனா். இதன் பின்னர் பிபிசி செய்தி சேவைக்கு சம்பந்தன் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு சமீபத்தில் திருகோணமலையில் நடத்திய நான்குநாள் விசாரணையை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சில புறக்கணித்திருந்த செயல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சம்பந்தர் அந்த நிலைப்பாட்டுடன் தமக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்தார்.
இந்த ஆணைக்குழுவின் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த ஆணைக்குழுவின் விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியமளிப்பது கடமை என்று சம்பந்தர் கூறினார்.