Breaking News

உள்நாட்டு விசாரணை அறிக்கை ஜூலையில் வெளிவரும் - பிரித்தானியாவிடம் மைத்திரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டம்பரில் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, இலங்கை இது குறித்த தனது உள்நாட்டு விசாரணை அறிக்கையை வெளியிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டன எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்டிடம் உறுதியளித்திருக்கின்றார்.

பிரிட்டனில் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, மிலிபான்டை லண்டனில் சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு உறுதியளித்திருக்கின்றார். ஜனாதிபதி தங்கியுள்ள லண்டன் ஹில்டனில் இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். பொறுப்புக்கூறும் விடயத்தைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் மங்கள சமரவீர விளக்கிக் கூறினார். எதிர்வரும் ஜூலையில் இலங்கையின் விசாரணை அறிக்கை வெளிவரும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா.வின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமையை எதிர்த்தும் அதனை உடனடியாக வெளியிடுமாறு கோரியும் லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே லண்டன் ஹில்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித்த தேர்தலில் தான் வெற்றி பெற்றதையடுத்து தமிழ் மக்களுடன் மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால, பிரதம நீதியரசராக சிறிபவன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இராணுவப் பின்னணியைக் கொண்ட ஆளுநர் மாற்றப்பட்டு சிவிலியன் ஆளுநர் ஒருவர் வடக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.