Breaking News

கோபித் - தமிழீழ விடுதலையின் வீச்சு (காணொளி)

வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை
மாணவன் கோபித் என்கிற  தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான்.

இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன.

வன்னிக்காடுகளிலும்,யாழ்குடா நாட்டிலும் இளம் போராளியாக தன் களப்பணியைத் துவங்கிய கோபித், தனது இயல்பான தலை மைத்துவப் பண்புகளால் இயக்கத்தில் படிப்படியாக வளர்ந்தான். யாழ்குடா நாட்டில் எதிரியின் தொடர் காவலரண்கள் மீதான ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு இயக்கம் திட்டமிட்டபோது, அந்தக் களமுனையின் வரைபடத்தைத் தயாரித்துத் தருமாறு மூத்த தளபதி பால்ராஜ் அவர்கள் கோபித்தைப் பணித்தபோது அவனுக்கு வயது பதினேழு. அந்த வரைபடத்தை வைத்து அணித்தலைவர்கள் மற்றும் தளபதிகளுக்கு குரூப் லிடுராக திட்டங்களை விளங்கப்படுத்தியபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும் அந்தத் தாக்குதல் மிகப் பெரும் வெற்றியடைந்தது.

இதனால் இளம் கோபித்தின் தன்னம்பிக்கையும் முன்முயற்சிகளும் ; பலமடங்கு உயர்ந்தன. ஆரம்பத்தில் செக்சனில் இண்டுக்காரானா தொடங்கிய கோபித்தின் களப்பயணம் விரைவிலேயே மூன்றுபேர் குழுவுக்குத் குழுத் தலைவனாக தொடர்ந்து யாழ்குடா நாட்டில் எதிரியுடனான ஒரு மோதலில் இவனுடைய செக்சன் ஈடுபட்டிருந்தபோது, தீவிரமான தாக்குதலில் செக்சன் லீடர் வீரச்சாவடைய மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான கோபித் ஒரு நிமிடத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டு, செக்சன் லீடரின் நடைபேசியை எடுத்து சண்டை நிலவரங்களை முதுநிலை அணித்தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் அறிவிக்கத் தொடங்கினான்.

இளம் கோபித்தின் இந்த உடனடிச் செயற்பாடு அன்றைய சண்டையின் போக்கை மிகச்சரியாக நடத்திக் கொண்டு சென்று போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. இளம் கோபித்தின் இச்செயற்பாட்டால் தளபதிகளின் பார்வை இவன்பக்கம் திரும்பவே, அவனுக்கு தொலைத் தொடர்பிலும் வரைபடத்திலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தாக்குதல் அணியின் செக்சன் லீடராக உயர்த்ப்பட்டான்.

செக்சன் லீடராக களப்பணியைத் துவங்கிய கோபித் விரைவிலேயே வேவு அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அச்சமறியாத இயல்பு, ஓயாத தேடல், விரைவான நகர்வு முதலிய சீரிய பண்புகளால் சிறந்த வேவுப்போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ் பூத்த  வேவுப் போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ்பூத்த வேவுப் போராளிகளான  வீரமணியுடனும் சத்யாவுடனும் இணைந்து முல்லைத்தீவு படைத்தளம், ஆனையிறவு பரந்தன் பகுதிகள், மன்னார் தள்ளாடி படைத்தளம் ஆகிய பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள் மிகப் புகழ்பெற்றவைகளாக விளங்கின.

மேலும் கோபித் தனது தாக்குதல் அணிகளை எதரியின் முகாம்வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதிலும், நெருக்கடியான நேரங்களில் மாற்றுப்பாதைகளைத் தெரிவு செய்வதிலும் தேர்ச்சிபெற்று விளங்கினான் இதனால் பல சமயங்களில் தேவையில்லாத இழப்புக்களைத் தவிர்த்தான். கோபித்தின் களத்திறன்களைத் தொடர்ந்து கண்காணித்து அவனை ஊக்கப்படுத்தி வந்த  ''லீமா'' ஒரு கட்டத்தில் அவரைத் தன் கட்டளை மையத்தில் எடுத்து, தொலைத்தொடர்பு, வேவு, கனரக ஆயுதங்கள் பாவனை, வரைபடம், இளம் அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டம் முதலான பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தினார். 

லீமாவிடமிருந்து தேர்ந்த செக்சன் லீடராக தாக்குதலணிக்குத் திரும்பிய கோபித் எதிரியின் ஜெயசிக்குறு   முறியடிப்புச் சண்டையில் ஓய்வொழிச்சல் இன்றறி போராடினான். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் ராகவன், மதன் ஆகியோரின் வழிநடத்தலில் கோபித் மிகச் சிறப்பாகச் செயற்பட்டான். பின்னர் மூத்த தளபதி தீபன் அவர்களின் கட்டளை நிலையத்தில் வேவுப் போராளியாகவும் வரைபடக்காரனாகவும் கடமையாற்றினான்.

பிரி.பால்ராஜ் பற்றி கோபித்தின் நினைவுப் பகிர்வு



அடர்ந்த காட்டில் திசைகாட்டியின் துணையுடன் நகருகின்ற ஒரு பயிற்சியில் இயக்கத்தின் பல பிரிவுகளிலிருந்து வந்த அணித்தலைவர்களுடன் இணைந்து கோபித் ஈடுபட்டிருந்தபோது சமயோசித அறிவுக்கூர்மையுடன் திறமையாகச் 
செயற்பட்டு, குறுகிய நேரத்திற்குள் குறிக்கப்பட்ட இடத்தை முதலாவதாக அடைந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினான். அவனுடைய திறமைகளைப் பாராட்டிய மூத்த தளபதி சசிக்குமார் ஆசிரியர் அவர்கள் அந்தப் பயிற்சித்திட்டம் முழுமைக்கும் கோபித்தைப் பொறுப்பாளானாக்கி மேலும் அவனுடைய திறமைகளை வளர்த்தெடுத்தான்.

மூத்த தளபதி தீபன் அவர்களிடமிருந்து மீண்டும் படையணிக்குத் திரும்பிய கோபித் பிளாட்டுனுக்குத் தலைமையேற்றுக் களமாடினான். மேலும் சிறுரக மோட்டார் பீரங்கிச் சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்புப் போராளியாகவும், வேவுப் போராளியாகவும் ஒரே சமயத்தில் பல தளங்களில் செயற்பட்ட சிறப்புக்குரிய போராளியாக கோபித் விளங்கினான்.

கிளிநொச்சி நகரை மீட்ட ஓயாத அலைகள் 02 நடவடிக்கையில் கோபித் பிளாட்டூன் லீடராகத் தடையுடைப்பு அணிக்குத் தலைமை ஏற்று திறம்படச் செயற்பட்டான். படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களும் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி அவனுடைய களத்திறன்களை மேன்மேலும் வளர்த்தெடுத்தனர். 

கிளிநொச்சி மீட்புக்குப் பிறகு படையணியில் கொம்பனி லீடராக கோபித் சிறப்புத் தளபதி சேகர் அவர்களால் நியமிக்கப்பட்டான். கொம்பனி மேலாளராக நியூட்டன் கடமையிலிருந்து கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். சில மாதங்களின் பின் படையணியின் சிறப்புத்தளபதியாக ராகவன் அவர்கள் பொறுப்பேற்றபின் கோபித்தின் இணைபிரியாத் தோழர்களாக பிரபல்யன், ஐயன், வல்லவன், மலரவன், அமுதன், முத்தரசன், ஜீவன், அனல்மணி, பருதி, 
தேவன், தென்னரசன் போன்ற அணித்தலைவர்கள் கோபித்துடன் இணைந்து செயலாற்றினர்.

அணித் தலைவர்களிடையே நிலவும் சகோதரத்துவம், கட்டுப்பாடுகள், கூட்டுச் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இவர்களை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். கோபித்தின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்தவரையில் அவன் மிகவும் கலகலப்பான ஒரு போராளியாக விளங்கினான். பழகுவதற்கு எளிமையும், இளகிய மனம் படைத்தவனாகவும் தோழமைக்கு முக்கியத்துவம் தவருபவனாகவும் திகழ்ந்தான். கோபித் இருக்குமிடம் எப்பொழுதும் உற்சாக மிகுதியில் நிறைந்திருக்கும்.  அனைவரையும்  கவரும் வகையில் கதைப்பதிலும் சமயங்களுக்கேற்ப பகிடிகள் விடுவதிலும் கோபித்திற்கு இணையானவர்கள் படையணியில்  இல்லை  என்றே  கூறலாம்.  இதனாலேயே  இறுக்கமான களச் சூழ்நிலைகளில் கூட கோபித்துடன் இருப்பவர்கள் இயல்பான மனவூக்கத்துடன் காணப்படுவர்.

புதிய  போராளிகள்  முதல் களமுனையின் முதுநிலை அணித்தலைவர்கள், தளபதிகள் வரை அனைவரோடும் சமமாகப் பழகும் மனிதநேயம் கோபித்தின் தனிச்சிறப்பு. போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் காண்பதிலும் அவற்றை போராட்டத்தின் தேவகைளுக்கேற்ப வளர்த்தெடுப்பதிலும் கோபித் ஆர்வம் காட்டினான். மதிநுட்பத்தோடும் தொலைநோக்கோடும் கோபித் எடுத்த பல முன்முயற்சிகள் எதிர்காலத்தில் படையணியின் களச்செயற்பாடுகளிலும் படையணியின் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை உருவாக்கியிருந்தன.

காவலரண்களை வலிமையாகவும் தந்திரோபாயத்தாலும் அமைப்பதோடு மட்டும் கோபித் மன நிறைவு சொள்ளமாட்டான். மேலும் அவை கலை நயமும் தூய்மையும் கொண்டவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவான். கோபித்தின் பிளாட்டூன் லீடர்களும் சென்சன் லீடர்களும் அவனுடைய ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் மிகு 
ந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனா் இதனாலேயே கோபித் பொறுப்பெடுத்த எந்த வேலையும் நேர்த்தியும் கலைநயமும் கொண்டவையாக இருக்கும்.

கோபித் தன்மானமும் கௌரவமும் பிடிவாதமும் கொண்ட ஒரு அணித்தலைவானக இருந்தான். தவிர்க்க இயலாத தருணங்களில் தனது பிடிவாத குணத்தைக் கைவிட்டாலும் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். மேலும் அவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. இது வறட்டுத்தனமான, மனம்போன போக்கில் உதிக்கும் தன்னம்பிக்கையல்ல. நீண்ட பட்டறிவாலும் கூர்மையான மதிநுட்பத்தாலும் தளராத ஊக்கத்தாலும் விளைந்தவை  அவை. அவனுடைய போராட்ட வாழ்க்கையில் இந்தத் தன்னம்பிக்கை எமக்கு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தந்திருக்கின்றன.

சுட்டித்தீவிலிருந்து ஊரியான் வரையிலான முன்னரண் வரிசையில் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் வழிநடத்திலில் கொம்பின லீடராக கோபித் பணியாற்றிய காலங்களில் ராகவனின் நம்பிக்கைக்குரிய அணித்தலைவனாக பல்வேறு கடமைகளில் ஈடுபட்டான். தனது பகுதியில் விரைவிலேயே காவலரண்கள், நகர்வகழிகள் அமைக்கும் பணிகளை முடித்துக்கொண்ட கோபித் ராகவன் வகுத்த பயிற்சித் திட்டங்களை பொறுப்பேற்று செயற்படுத்தினான்.

தடையுடைப்புப் பயிற்சி, திசைகாட்டி மற்றும் புவிநிலை காண் தொகுதி  (G.P.S) பயிற்சி, கண்காணிப்பு (O.P) பயிற்சி முதலியவற்றிக்கு பொறுப்பாளனாக இருந்து போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் சின்னமணி, கீதன், கில்மன் ஆகியோருடன் இணைந்து பயிற்சித்திட்டங்களை திறம்பட நடத்தினான். இக்கால கட்டத்தில் ஓய்வில்லாது நடமாடிக் கொண்டேயிருப்பான். தொடர் முன்னரண் வரிசை, கிளிநொச்சி, உருத்திரபுரம், திருவையாறு, குஞ்சுப்பரந்தன், முதலான பயிற்சித்தளங்கள் என எங்கும் கோபித்தின் பாதங்கள் படாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவனுடைய செயற்பாடுகள் பரந்து விரிந்து இருந்தன.

சூனியப் பகுதிக்குள் எதிரியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முன் தளத்தில் போராளிகள் பயிற்சிகளில் இருந்தபோது முன்னரண் வரிசைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ராகவன் அவர்கள் சிறிய பதுங்கித் தாக்கும் அணிகளை உருவாக்கி சூனியப் பகுதிகளில் நிலைப்படுத்தினார்.  அதில்  செக்சன் லீடர் விஜித்திரனின் தலைமையில்  ஒரு  குழுவை கோபித்  பொறுப்பேற்று நடாத்தினான். அந்த அணி பலமுறை எதிரியின் ஊடுருவல் முயற்சிகளை இடைமறித்துத் தாக்கியது.

விஜிதரனின் சீரிய செயற்பாடுகளை இந்நடவடிக்கையில் கோபித் மேம்படுத்தி வளர்த்தான். ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை ஓட்டுசுட்டானில் துவங்கயிபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டராகக் களமிறங்கினான். படையணியை சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கள், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுசுட்டானில் வீரச்சாரைவத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத்தளபதி இராசிசிங்கத்தின் வழிநடத்தலில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான்.

அம்பகாமம் களமுனையில் துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்தலில் கோபிததின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்து எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கிய பங்காற்றினான். இத்தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டு எதிரிகளை   விரட்டியடித்தான்.

ஓயாத அலைகள் - 03 தொடர்நடவடிக்கையால் மன்னார் களமுனை திறக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு அங்கிருந்த தாக்குதலணிகள் சற்றே இளைப்பாற பின் தளத்திற்கு தள்ளப்பட்டபோது அப்பகுதிகளின் பாதுகாப்புக்கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புத் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவில் இருந்து மடு - தம்பனை வரையிலான வீதிகளையும் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக்கடந்தான் காலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது,

இக்கடமையின்போது இரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித் தாக்கும் அணிகள், றோந்துக்குழுக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினர். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப்பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர். ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச்சமர் துவங்கியபோது சிறப்புத் தளபதி  இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி மிக வலிமையான காவலரண்களை அமைத்து கனரக ஆயுதங்களால் காவல் செய்து வந்தான்.

இதனால் போராளிகளுக்கு சாதகமற்ற நிலை அங்கே நிலவியதை தனது தேர்ந்த அனுபவத்தால் அறிந்து கொண்ட கோபித் அங்க தனது அணிக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தவிர்த்துக் கொண்டு  மற்றப்பாதையால் செல்ல முடிவெடுத்தான் அங்கு புலனாய்வுத் துறை தளபதி அறிவு அவர்கள் உடைத்த பாதையில் தனது அணியினை நகர்த்திய கோபித் எதிரியின் தொடர் 
காவலரண்களைத் தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறினான் A-9 வீதியில் கோபித்தின் தோழன் வீரமணி பிளாட்டூன் லீடர் மஞ்சுதனைக் கொண்டு தடையைத் தகர்த்தெறிந்து பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அதேவேளையில் கோபித் யு-9 வீதியின் வலப்பக்கமிருந்த வலிமையான காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு காளிதாஸ் வீடு என்று அழைக்கப்பட்ட எதிரியின் முக்கிய தளத்தைக் கைப்பற்றி போராளிகளின் நிலைகளைப் பலப்படுத்தினான்.

இந்தச் சமரில் முன்னனித் தாக்குதலணியிலிருந்து சண்டையிட்டுக் கொண்டே எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்பு போராளிகாளாகவும் செயற்பட்ட பெருமையைப் பெற்றான முன்னாட்களில் பரந்தன் பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேவு நடவடிக்கைளின் அனுபவம் இந்தச் சமரில் அணிகளை இலகுவாக நடத்திச் செல்ல கோபித்திற்கு பெரிதும் உதவியாக  இருந்தது.

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக இத்தாவில் தரையிறக்கச்சமருக்கான ஆயத்தவேலைகளில் கோபித் முழுவீச்சுடன் ஈடுபடுத்தப்பட்டான். குடாரப்பில் முதலாவதாக தரையிறங்கும் அணிக்கு கொமாண்டராகப் பொறுப்பேற்று களமிறங்கினான். ஐயன், இலக்கியன், பருதி, வீரன், இயல்வாணன் போன்ற அணித்தலைவர்களைக் கொண்டு விசேடமாக 
உருவாக்கப்பட்ட இவ்வணி குடாரப்புவில் முதலாவதாகத் தரையிறங்கி அங்கிருந்த சிறு முகாம்களையும் காவலரண்களையும் தகர்த்தழித்துக்கொண்டு இத்தாவில் பகுதிக்குள் நுழைந்து கணிசமான தொலைவை மிகவும் இரகசியமாகவும் விரைவாகவும் கடந்து   ஏ-9 வீதியை  
அடைந்து,

அங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை உள்ளடக்கி இருபுறமும் மறிப்பைப்போட்டு, நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலணி பாதுகாப்பாக உள்ளே வர வழிகோலினான். கோபித்தின் அணி அன்று அமைத்த பெட்டி வியூகம் ஒரு மாதத்திற்கும் மேலாக எதிரியால் உடைக்கப்படமுடியாமல் பாதுகாக்கப்பட்டு இறுதியில் 
ஆனையிறவை மீட்டுத்தந்தது.

இத்தாவில் பெட்டி வியூகத்தின்  ஏ-9 சாலையின் நாயகர்களாக நின்ற ஐயன், வீரன் சிந்து, இயல்வாணன், இலக்கியன், பருதி ஆகியோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடாத்தினான். சாலைக்கு வலதுபுறம் வீரன் அணியும் இடது புறம் தேவனின் அணியும் முழுமையாக கோபித்தின் கட்டளையின் கீழ் செயற்பட்டன. சாலையைக் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட கடுமையானதொரு ''டாங்கி'' தாக்குதலில் கோபித்தின் நிலை தகர்கப்பட்டு காவலரணிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டான்.

சில விநாடிகள் மூர்ச்சையாகிக் கிடந்த கோபித் மீண்டும் துடித்தெழுந்து அந்த சண்டையைத் தொடர்ந்து செய்தான். அன்று ஐயனும் பரிதியும் வீரச் சாவை தழுவிக்கொள்ள ஆவேசமடைந்த கோபித் இலக்கியன், தேவன், வீரன் முதலான அணித்தலைவர்களைக் கொண்டு மூர்க்கமாகிப் போராடி எதிரியை முறியடிக்க யு-9 வீதியை தக்கவைத்துக் கொண்டான். ஐயனுக்குப் பிறகு அணித்தலைவன் சிந்துவைக் கொண்டு வலிமையான பாதுகாப்பை அமைத்தான் கோபித்; கட்டளைத் தளபதி லீமா, சிறப்புத் தளபதி இராசிங்கம், 
இணைத்தளபதி நேசன் ; ஆகியோரின் சீரிய வழிநடத்தலோடு கோபித்தின் வேகமும் விவேகமிக்க செயற்பாடுகள் இறுதிவiரை இத்தாவலில் பகுதியின் ஏ-9 வீதியை பாதுகாத்து நின்றன.

இயக்கச்சித் சந்தியிலிருந்த எதிரியின் பலம்மிக்க முகாம்களையும் நிலைமைகளையும் வீரமணி தகர்த்தெறிந்த மின்னல் வேகப் பாச்சலில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்தபோது ஆனையிறவோடு சேர்ந்து பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்ட்டன. இச்சமரில் கோபித்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. தேசியத் தலைவர் அவர்களாலும் மூத்த தளபதி காளலும் கோபித் வெகுவாக பாராட்டப்பட்டான்.

இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்கள் புதிய உந்துருளியொன்றை பரிசளித்து கௌரபவப்படுத்தினார். இச்சமருக்குப் பிறகு 
தேசியத் தலைவரும் தனிப்பட்ட பார்வையும் அக்கறையும் கோபித்தின் மீது திரும்பியது. தேசியத் தலைவர்கள் அவர்கள் கோபித்தைப் பாராட்டி மேலும் பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு தனங்கிழப்பு கிழக்கு அரியாலையிலிருந்து முன்னேறிய எமது படைப்பிரிவுகள் கனகம்புளியடி, கைதடிப்பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழப்பாணம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் நாகர் கோவில் கைப்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் கோபித் ஈடுபடுத்தப்பட்டான்.

எதிர்பாராத விதமாக சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள அடுத்த சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார் சேகர் அவர்கள். நாகர் கோவில் பகுதியில் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளில் கோபித்தை முழுமையாக ஈடுபடுத்தினார். படையணியின் தாக்குதல் தளபதியாக கோபித் தீவிரமாகச் செயற்பட்டான். ஒயாத அலைகள்  - 04 நடவடிக்கைக்காக தாக்குதலணி நகர்வதற்கான பாதையை உறுதிப்படுத்தும் பணியில் சேகர் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரியின் பதுங்கித் தாக்கும் அணியினரின் தாக்குதலுக்குள்ளான சேகர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஒருவருடத்திற்குள் மூன்று சிறப்புத் தளபதிகளை இழந்திருந்த மிகப் பெரிய சோக நிகழ்வினூடே தேசியத் தலைவர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை படை யணிக்கு நியமித்தார். வீரமணி சிறப்புத் தளபதியாகவும் நகுலன் தளபதியாகவும்  கோபித் துணைத் தளபதியாகவும் தலைவரால் நியமிக்கப்பட்டனர். ஓயாத அலைகள் - 04   நடவ 
டிக்கை எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும் நாகர் கோவிலின் ஒரு பகுதியையும் எழுது மட்டுவாள் முகமாலையின் கணிசமான பகுதிகளை எமது படைப்பிரிவுகள் மீட்டன.

இந்நடவடிக்கையில் கோபித் ஒரு பகுதியின் பொறுப்பாளராக இருந்து திறம்படச் செயற்பட்டார். 2001ம் ஆண்டு தைமாதத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களால் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்புத் தளபதி வீரமணி எமது பகுதியில் காவலரண்களை அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொழுது எதிரி ஒரு பாரிய முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டான்.

வீரமணி அவர்களும் அவருடன் இருந்த அணிகளும் முற்றுகையை உடைத்து வெளியேறுவுதற்காக தாக்குதலை தீவிரமாக தொடுத்த பொழுது கோபித் முற்றுகைக்கு வெளியேயிருந்து மிகச்சரியாகத் திட்டமிட்டு ஒரு பாதையை தெரிவு  செய்து கனரக மோட்டார் மற்றும் பீரங்கிச் சூட்டாதரவை வீரமணிக்கு வழங்கி தனது சிறப்புத்தளபதி பாதுகாப்பாக வெளியேவர     வழிகோலினான். இந்நடவடிக்கையில் வீரமணியுடன்  நின்று    களமாடிய முதுநிலை அணித்தலைவன் சேந்தனும் மோட்டார் அணியின் கொமாண்டராக தீவிரமாக செயற்பட்ட பிருந்தாவனும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

எதிரியின் இம்முற்றுகையை உடைத்த சண்டையில் துணைத்தளபதி கோபித்தின் மதி நுட்பமும் விவேகமுமான செயற்பாடுகள் மிகவும் காத்திரமாக இருந்தன. இதன் பின்னர் முகமாலைக் களமுனையில் முன்னரண் வரிசை பாதுகாப்புக் கடமையில் படையணி ஈடுபடுத்தப்பட்டபோது கோபித் துணைத்தளபதியாகவும் ஒருபகுதியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். முன்வரிசையை வலிமைப் படுத்தியதோடு மட்டுமன்றி பின்தள கட்டளை நிலையங்கள் மற்றும் ஆதரவுத் தளங்கள் அனைத்தையும் வலிமைமிக்தாக கட்டமைத்து ஒரு முழுமையான முறியடிப்பு சண்டைக்கு தனது பகுதிகளை கோபித் தயார்படுத்தியிருந்தார்.

எதிரி மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்ற மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாலும் ஷதீச்சுவாலை| நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரை துணைத்ளபதி கோபித் மிகச் சிறப்பாக வழி நடாத்தினார். இந்தச் சமரில் கோபித்தின் கட்டளை மையம் எதிரியால் பலமுறை முற்றுகையிடப்பட்ட போதும் அவர் சிறிதும் கலங்காது முன்னரண் வரிசைச் சண்டையைத் தீவிரமாக நடத்தினார். இந்தச் சமரின் இறுதிக்கட்டத்தில், கோபித் நேரடியாகத் தனது குழுவுடன் முன்னரண் வரிசையில் இறங்கி, மிகத் தீவிரமான அதிரடித் தாக்குதல் மூலம் எதிரியை விரட்டியடித்து எமது பகுதிகளை முழுமையாக மீட்டெடுத்தார்.

கோபித்தின் தீர்க்கமான முடிவுக்கும்,கட்டளைகளும் இச்சமரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. இதன்பின்னர் நாகர் கோவிலில் படையணி நிலைகொண்ட போது அங்கு பகுதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். 2002ல் சிறப்புத் தளபதி வீரமணி அவர்களின் பணிப்பின் பேரில் பின்தள ஆழுகைக் கடமைகளில் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் படையணியின் பின்தள முகாம்களைப் புனரமைப்பதிலும் படையணிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார்.

புதிய மருத்துவத்தளம். ஆளுமைத் தளங்கள் புதுப்பிப்பு, மாவீரர் மண்டபம் அமைத்தல் போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தார். படையணியின் ஆளுகைப் போராளிகளிடையே கட்டுப்பாட்டையும் ஒழுக்க நெறிமுறைகளையும் பேணுவதில் கோபித் மிகுந்த அக்கறையெடுத்தார். ஆளுகையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கி வழிநடத்தினார். மாதந்தோறும் நிர்வாக ஒன்று கூடல்களை நடத்தி தெளிவான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார்.

தளபதியாக தனது கடமைகளை விரிவுபடுத்தினார். ஆளுகைப் போராளிகள் அனைவரும் நாள்தோறும் குறுகிய நேரப் பயிற்சிகளில் ஈடுபட வழிகோலினார். இளம் அணித்தலைவர்களை ஊக்கப்படுத்தி மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுத்தார். குமுதன், சிலம்பரசன், தேவமாறன், கடற்கதிர் போன்ற இளம் அணித்தலைவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். யாழ் இன்பன், தமிழமுதன் போன்ற இளம் போராளிகள் பள்ளிக் கல்வியைத் தொடர வழி அமைத்ததோடு மேலும் அவர்ளை போராட்டத்தின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தி வளர்த்தெடுத்தார்.

ஆளுகைப்போராளிகள் சூட்டுப் பயிற்சிகளிலும் முறையான விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.பயிற்சி, வேலைத்திட்டம், ஓய்வு, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் என ஆளுகைப் போராளிகளுக்கு அன்றாட நிகழச்சி நிரலை முறைப்படுத்தி நடாத்தினார். புதிய போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதில் கோபித் தனிக் கவனம் செலுத்தினார். போராளிகளின் கல்வி அறிவை மேம்படுத்தி பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துச்செயற்படுத்தினார்.

அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கி ஆளுகைப் போராளிகளின் பல்வேறு கடமைகளூடே பயிற்சித் திட்டங்களையும் சரியாக நெறிப்படுத்தினார்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கை ஓட்டுச்சுட்டானில் துவங்கியபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டவராகக் களமிறங்கினான். படையணியின் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் 
சாரங்கன், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுச்சுட்டானில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்ததில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான்.

அம்பகாமம் களமுனையில் கோபித்தின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்த எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கியப் பங்காற்றினான். இத் தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்ட எதிரிகளை விரட்டியடித்தான்.

ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் மன்னார் களமுனை திறக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு, அங்கிருந்த தாக்குதல் அணிகள் சற்றே இளைப்பாற பின்தளத்திற்கு நகர்த்தப்பட்ட போது, அப்பகுதிகளின் பாதுகாப்புக் கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவிலிருந்து மடு - தம்பனை வரையான வீதியையும் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக் கடந்தான் சாலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 இக்கடமையின் போது இவ்விரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித்தாக்கும் அணிகள், றோந்துக் குழக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினார். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச் சமர் துவங்கி யபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான்.

வீரமணி தடையுடைப்பு அணியின் கொமாண்டராக களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்ட நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்| நூலை வெளிக்கொண்டு வருவதில் கோபித் பெரும் பங்காற்றினார். இந்நூல் வெளியீட்டு விழாக்களை உணர்வு பூர்வமாகவும் கலைநயத்துடனும் நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்தச் செயல்படுத்தினார்.

இராகசீலம் இசைக்குழு உருவாக்குவதிலும் அதில் போராளிக் கலைஞர்களைப் பயிற்றுவித்து வளர்ப்பதிலும் கோபித் பெரும் பங்காற்றினார். போராளிகளின் புதிய முயற்சிகளை எப்பொழுதும் வரவேற்று ஊக்கப்படுத்தும் கோபித் போர்ப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற எமது இசைக்குழு நிகழ்ச்சியில் சின்னமணி ஆசிரியருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடி சிறந்த பாடகராக விளங்கினார். 2006ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் கோபித் நியமிக்கப்பட்டார்.

சிறப்புத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட சில மாதங்களிலேயே முகமாலைச் களமுனையில் சண்டை துவங்கியது. இச்சமரில் கோபித் சிறப்புத் தளபதியாகவும் பகுதிப் பொறுப்பாளராகவும் இருந்து செயற்பட்டார். பல்வேறு காரணங்களால் இச்சமர் எதிர்பார்த்த வெற்றியை எமக்குத் தராவிட்டாலும் படையணியின் செயற்பாட்டில் வீரியமும், வீச்சும் குறையாமல் கோபித் வழிநடத்தினார்.

படையணியின் தாக்குதல் தளபதிகளான தென்னரசன், வீரன், நாகதேவன், குட்டி உள்ளிட்ட பல அணித்தலைவர்களும் போராளிகளும் இச்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையிலும், ஏ- 9 வீதியையொட்டி நாம் கைப்பற்றிய பகுதிகளை இளம் தளபதி பாவலனைக் கொண்டு இறுதிவரை தக்க வைத்திருந்து கோபித் தனது திறமையை வெளிப்படுத்தினார். இச்சமரில் மோட்டார் அணித் தலைவர்கள் சிலம்பரசன், ஜெயசீலன் உள்ளிட்டோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடத்தி அவர்களை மேலும் வளர்த்தெடுத்தார்.இதனையடுத்து 2006ம் ஆண்டு 10ம் மாதம் எதிரி பலையைக் கைப்பற்றமேற்கொண்ட பாரிய நடவடிக்கையை தடுத்து நிறுத்திய முறியடிப்புச் சண்டையை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். 

இச்சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டதோடு எதிரி  முற்று முழுதாக முறியடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். மிகச்சிறிய காலத்தில் காலத்தில் இம்முறியடிப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி பெரும் வெற்றியை கோபித் ஈட்டினார்.இந்நடவடிக்கைக்குப் பின்னர் படையணிக்கு புதிய போராளிகள் அணியணியாக வந்த வண்ணமிருந்தனர்.

புதிய போராளிகளை களச்சூழலுக்குக்கேற்ப கோபித் பயிற்றுவிப்பதிலும் அவர்களின் உளவுதிரனை மேம்படுத்துவதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய பயிற்சித் தளங்களை நிறுவி இளம் அணித்தலைவர்களை உருவாக்குவதில் கோபித் பெரும் முயற்சி எடுத்தார். தாக்குதல் அணியால் களச்சூழலுக்கேற்ப விசேட அணிகளை உருவாக்குவதில் கோபித் மிகுந்த முக்கியத்துவம் எடுத்தார். படையணியின் தாக்குதல் தளபதிகளான வரதன், புரட்சி ஆசிரியர், செங்கோலன், விவேகானந்தன், அமுதாப், முத்தழகன், பாவலன், செல்லக்கண்டு முதலான தீரம்மிக்க போராளிகளை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். அணிகளைப் பிரித்துக் கொடுத்து கடமைகளில் ஈடுபடுத்தினார். பயிற்சிக் கல்லூரியில் அவர் மேற்கொண்ட கடும் உழைப்பின் பயன் பின்னாட்களில் நிகழ்ந்த சண்டைக் களங்களில் எமக்குப் பல வெற்றிகளை ஈட்டித்தந்தன.

எதிரி மன்னார் ஊடாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க பாரிய நடவடிக்கைகளை துவங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்த தேசியத் தலைவர் அவர்கள் கோபித்தை மன்னார் களமுனைக்கு மாற்றினார். மடு, தம்பனை, இரணை, இலுப்பைக்குளம் பகுதிகளிலும் பனங்காமம், நட்டாஸ் கண்டல் பகுதிகளிலும் படையணி களமிறக்கப்பட்டது. இந்நாட்களில் எதிரியின் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளை கோபித் தடுத்து நிறுத்தியதோடு எமது பகுதிகளில் புதிய நிலைகளையும், வியூகங்களையும் அமைத்துப் பாதுகாப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார்.

தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் பல்வேறு அதிரடித் தாக்குதல்களை எதிரி மீது மேற்கொண்டு பல வெற்றிகளைப் பெற்றார். எமக்கு எதிராக மிகப்பெருமளவில் சதிச்செயல்களும் படைபலமும் எதிரியால் ஏவிவிடப்பட்டபோதும் கோபித் உறுதியுடன் நின்று தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றினார். மன்னார் பெரிய தம்பனையில் படையணியின் தாக்குதல் தளபதிகள் வீரமைந்தன் அணியையும் வாணன் அணியையும் கொண்டு கோபித் நடாத்திய மிகக்கடுமையான முறயடிப்புத் தாக்குதல்கள் எதிரியின் முன்னேற்றத்தைக் கணிசமான நாட்களுக்குத் தடுத்து நிறுத்தின. மிகவும் வஞ்சகமான சதிச்செயல்களால் இயக்கத்தின் பாதுகாப்பு வியூகங்களில் எதிரி முட்டுப்படாமல் தவிர்த்துக்கொண்டு காட்டின் வெவ்வேறு வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தான்.

இந்நாட்களில் எதிரியின் நகர்வைச் சரியாக இனங்கண்டு வழிமறித்துத் தாக்குவதிலும், மேலும் முன்னேற விடாமல் தடுப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். 2008ல் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களை நியமிக்கப்பட்டு, கோபித் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் மன்னார் களமுனையின் கட்டளைத்துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முழங்காவில் பகுதியில் எதிரியைப் பல நாட்கள் தடுத்து நிறுத்திப் போரிட்ட கோபித் வன்னேரிக் குளத்தில் எதிரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திக் கடுமையான சமர்களைப் புரிந்தான்.

இதன் பின்னர் எமது வியூகங்களை மீறி தொடர்ந்து முன்னேறிய எதிரியை அக்கராயன் குளத்தில் கோபித் இடைமறித்து கடுமையாகத்தாக்கினான். இச்சமரில் கோபித் பல வெற்றிகளைப் பெற்ற போதிலும், எதிரி மேற்கொண்ட 
வஞ்சக செயல்களால் அங்கிருந்து பின்வாங்கி கிளிநொச்சியைப் பாதுகாப்பதில் முனைப்புடன் ஈடுபட்டான்.

கிளிநொச்சியைச் சுற்றிலும் மிகச் சிறப்பான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கி இரண்டு மாதத்திற்கும் மேலாக எதிரியை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் பாதுகாத்து நின்றான். 2009ல் தந்திரோபாய ரீதியாக கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கியபோது, கோபித் கட்டளைத் தளபதி தீபன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரமந்தனாறியிலிருந்து விசுவமடு வரையான பகுதிகளில் புதிய அரண்களை அமைத்துப் பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நாட்களில் எதிரியின் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சமர்களில் கோபித் பெரும் பங்காற்றினார். தொடர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களாலும் எதிரியின் மிகப்பெரும் அளவிலான படையெடுப்பாலும் விசுவமடு உடையர்கட்டிலிருந்து பின்வாங்கி வள்ளிபுனம், கைவேலிப் பகுதிகளை உள்ளடக்கி புதுக்குடியிருப்பைப் பாதுகாக்கும்  வகையில்  பாதுகாப்பு  வியூகங்களை  வகுத்து நடைபெற்ற சண்டைகளில் கோபித் தீவிரமாக ஈடுப்பட்டார்.

இந் நடவடிக்கைகளின் போது படுகாயமுற்ற கோபித், மருத்துவ வசதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் சில நாட்கள் தற்காலிக மருத்துவக் கொட்டிலில் சிகிச்சை பெற்று, ஓரளவு குணமடைந்தவுடனேயே மீண்டும் களமுனைக்கு திரும்பினார். தனது படைப்பிரிவைத் தீவிரமானதொரு தாக்குதலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் படுகாயமடைந்த கோபித் தனது உயிரை தமிழ் மண்ணின் விடுதலைக்காக ஈந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், கௌரவத்திற்காகவும் தனது இளமைக்காலம் முழுவதையும் அர்ப்பணித்து தீரத்துடன் போராடிய தளபதி கேணல் கோபித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு மாபெரும் வீரனாகவும், தளபதியாகவும் திகழ்ந்தார். அவருடைய போராட்ட வாழ்வும் வரலாறும் தமிழினத்திற்குப் பெரும் உந்து சக்தியாகவும் நம்பிக்கையாகவும் இருந்து எமது இனத்தை விடுதலை வாழ்வு நோக்கி நடத்திச் செல்லும் என்பது உறுதி.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''.