இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உள்ள, சையத் அக்பருதீன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 29ம் நாள், இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தோ- ஆபிரிக்க அமைப்பின் மாநாட்டுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இந்திய வெளிவிவகடார அமைச்சின் பேச்சாளராக, இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான விகாஸ் ஸ்வரப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஏப்ரல் 18ம் நாள் முதல் தனது பணியைப் பொறுப்பேற்றுக் கொள்வார்.
தற்போது இவர், இந்திய வெளிவிவகார அமைச்சில் ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான இணைச்செயலராக பதவி வகிக்கிறார். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள விகாஸ் ஸ்வரப்,துருக்கி, அமெரிக்கா, எதியோப்பியா, தென்னாபிரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர்.
இந்திய வெளிவிவகார அமைச்சில் இவர் பெரிதும் பிரபலம் பெறாத அதிகாரியாக இருந்தாலும், உலகப் பகழ்பெற்ற நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விகாஸ் ஸ்வரப் எழுதி, 2005 வெளியிட்ட”Q&A” என்ற புகழ்பெற்ற நாவல், 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாவலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்லம்டக் மில்லியனர் (Slumdog Millionaire) என்ற திரைப்படம் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், ‘Six Suspects,’ , ‘The Accidental Apprentice,’ ஆகிய நாவல்களையும் எழுதியிருப்பவர் என்பதுடன், ரைம், நியூஸ் வீக், கார்டியன், டெய்லி ரெலிகிராப் போன்ற உலகப் புகழ்வாய்ந்த சஞ்சிகைகளில், சிறுகதைகளையும் எழுதியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.