பகீரதிக்கு கொலை அச்சுறுத்தல்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முருகேசு பகீரதி கொலை முயற்சியொன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பகுதியிலுள்ள தனது குடும்பத்தாருடன் தங்கியிருந்த பகீரதி நேற்று கடைக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் பகீரதிக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, பகீரதி வசிக்கும் பிரதேச காவற்துறை நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார்.
இந்நிலையில் கண்டாவளை பகுதியிலுள்ள தனது குடும்பத்தாருடன் தங்கியிருந்த பகீரதிக்கு இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது வீட்டை இனந்தெரியாத நபர்கள் உளவு பார்ப்பதாகவும் காவல்நிலையத்திற்கு கையொப்பமிடச் சென்ற பகீரதியை இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் பகீரதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.