Breaking News

மீனவர் பிரச்சினை: 9 மணி நேரம் நீடித்த பேச்சு! மே மாதத்தில் இறுதி முடிவு

தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் நேற்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே ஏற்கெனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இதில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது.

பின்னர், தமிழக மீனவர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அருளானந்தம்,செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது,

"ஏற்கெனவே நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 3-வது கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இலங்கையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள மீனவர்கள் மாநாட்டில் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து ஒப்புதல் பெறுவதாகவும், இணக்கமான சூழல் உருவாகும் என்றும் அந்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை பரிசீலிப்பதாக உறுதியளித்தனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை மீனவர்கள் சார்பில் பங்கேற்ற சதாசிவம் கூறியதாவது:

“பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடந்தது. 7 அம்ச கோரிக்கைகளை இந்திய மீனவர்கள் முன்வைத்தனர். இலங்கையை பொறுத்தவரை 30 ஆண்டுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். ஏப்ரல் முதல் வாரத்தில் வடகிழக்கு மீனவர் உயர்மட்ட மாநாடு நடக்கவுள்ளது. இதில், வடகிழக்கு மாகாண பிரஜைகள், மீனவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இந்திய மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து மே மாதம் முடிவு அறிவிக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் விவரம

இந்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணைச் செயலர் சுசித்ரா துரை, சென்னையில் உள்ள வெளியுறவு அமைச்சக கிளைச் செயலக தலைமை அதிகாரி, டி.ஏஞ்சலின் பிரேமலதா, மத்திய மீன்வளத்துறை ஆணையர் விஷ்ணு பத், இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி ஷிவ் தர்ஷன் சிங், தமிழக அரசு தரப்பில், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மீன்வளத்துறை செயலர் எஸ்.விஜயகுமார், மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் மீனவ பிரதிநிதிகளாக கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்திரவேலு, எம்.ஜெகநாதன், பி.ராஜமாணிக்கம், என்.குட்டியாண்டி, ஜி.ராமகிருஷ்ணன், என்.தேவதாஸ், பி.ஜேசுராஜா, யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன், எம்.இளங்கோ ஆகியோரும் பங்கேற்றனர்.

இலங்கை அரசு தரப்பில் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை தலைமை இயக்குநர் எம்.சி.எல்.பெர்னாண்டோ, மீன்வளத்துறை இயக்குநர் டி.எஸ்.நந்தசேனா, சென்னையில் உள்ள இலங்கை துணை ஹை கமிஷனர் ஏ.எஸ்.கான் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் டி.சதாசிவம், ஏ.ஜஸ்டின் சூஸா, ஜி.வி.எம்.ஜெரால்டு, என்.பொன்னம்பலம், பி.செந்தில்நாதன், ஜெ.பிரான்சிஸ், டபிள்யூ.ஜெ.கமிலஸ் பெரைரா, ஏ.மரியரசா,கே.ராஜசந்திரம், பி.அந்தோணிமுத்து ஆகியோரும், புதுச்சேரி அரசு சார்பில் அரசு சிறப்பு செயலர் டி.கரிகாலன், மீன்வளத்துறை இயக்குநர் ஆர்.மேரி சின்னராணி,

மீன்வளத்துறை துணை இயக்குநர் என்.இளையபெருமாள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் தங்கவடிவேல், எஸ்.பாஸ்கரன், என்.வீரதாசன், பி.செல்வமணி ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.