புனர்வாழ்வு முகாமில் இன்னும் 49 பேரே உள்ளனராம்! பிரதமர் அலுவலகம்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பலர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் புனர்வாழ்வு முகாமில் இன்னும் 49 பேரே உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், யுத்தத்துக்குப் பின்னரும் கைதாக முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு அவர்களின் பெற்றோர் கடந்த நாட்களாக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 49 பேர் மட்டுமே முகாம்களில் இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிலையான வருமானத்திற்காகவும் ஜீவனோபாயத்திற்காகவும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் திரும்பியுள்ளது.
புனர்வாழ்வு ஆணையளார் நாயகம் தலைமையிலாக குழுவொன்றும் நியமிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்றதோடு, இதில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, இளைஞர் விவகார அமைச்சர் நிரோஷன் பெரேரா, புனர்வாழ்வு ஆணையாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், இராணுவ உயரதிகாரிகள், இளைஞர் சேவைச் சபைத் தலைவர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்ததாத் தெரிவிக்கப்படுகின்றது.