Breaking News

இலங்கை சிறையிலிருந்த 43 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 43 பேர் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர் என இந்திய செய்தி தெரிவிக்கின்றது.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மீன்பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 86 மீனவர்களையும், இவர்களது 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இவர்களை இரு பிரிவாக்கி வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இவர்களில் முதல்கட்டமாக 43 மீனவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை காரைக்கால் வந்து சேர்ந்தனர்.

இரண்டாவது கட்டமாக எஞ்சிய நாகையை சேர்ந்த 21 பேரும், காரைக்காலை சேர்ந்த 22 பேரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய கடலோரக் காவல்படையினர் புதன்கிழமை காலை காரைக்கால் துறைமுகத்துக்கு இவர்களை கப்பலில் அழைத்துவந்தனர்.

கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், மீனவர்களிடம் விசாரணை நடத்தி அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.